இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! – Athavan News

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து வைகோ  மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால்  இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகியுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன.  இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.   அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

கடந்த 13ஆம் திகதி ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப்  பறிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.  அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும்  மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனவும்  வைகோ தெரிவித்துள்ளார்.

 

நன்றி

Leave a Reply