45
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் பல உண்மைகள் காவற்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளன. இந்த கொலையை திட்டமிட்டவர்கள் தங்கியிருந்த இடம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பாதாள உலகத் தொடர்புகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, அன்கும்பர பகுதியில் அமைந்துள்ள முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீட்டிலேயே கொலையாளிகள் தங்கியிருந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 7ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அங்கிருந்தே கொலையைத் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் 22ஆம் திகதி கொலையைச் செய்துவிட்டு, மீண்டும் அதே வீட்டிற்கே தப்பிச் சென்று மறைந்திருந்துள்ளனர். காவற்துறையினர் அங்கு செல்வதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
ரிபத்கொட மற்றும் மாகொல பகுதிகளில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்குப் போக்குவரத்து வசதி செய்துகொடுத்ததை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலை நடந்துள்ளது. விசாரணைகளின் படி, இக்கொலையில் கொஸ்கொட சுஜீ, கொத அசங்க, கரந்தெனிய சுத்தா, கரந்தெனிய ராஜு, தொல மற்றும் தசுன் மானவடு ஆகிய முன்னணி பாதாள உலகக் குற்றவாளிகள் கைகோர்த்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
கொல்லப்பட்ட கோசல என்பவர், பாதாள உலகத் தலைவன் கொஸ்கொட சுஜீயின் பரம எதிரியான ‘ஊரகஹ மைக்கல்’ என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததே அவர் இலக்கு வைக்கப்பட்டதற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புத் தரப்பில் இருந்த ஒருவரின் சொத்துக்கள் குற்றவாளிகளுக்கு புகலிடமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
________________________________________
