இஸ்ரேலில் உள்ள விசேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2025 மே மாதம் தொழில் நிமித்தம் இஸ்ரேலுக்கு வருகை தந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேக நபர், தனது உத்தியோகபூர்வ வேலைத் துறைக்கு அப்பால் தற்காலிகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்டர்போலின் (Interpol) இஸ்ரேலிய கி கிளையிடமிருந்து தூதரகத்திற்கு கிடைத்த தகவலின்படி, அவர் பெயிட் ஷமேஷ் (Beit Shemesh) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசேட தேவையுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஒரு வழக்காக இஸ்ரேலிய அதிகாரிகள் இதனை விசாரித்து வருவதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவியல் மற்றும் சமூக நடத்தை குறித்த இஸ்ரேலின் கடுமையான சட்டங்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், இவ்வாறான பாரதூரமான குற்றங்கள் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளது. அத்துடன், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் சட்டங்களையும் சமூக விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
