அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமேய்னி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கு ஊர்வல விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானில் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், ஜூலை 9ஆம் திகதி ஈரானின் புனித நகரான மஷ்ஹாத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
உலகத் தலைவர்கள் பலருக்கும் இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள ஈரானிய அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி முன்கூட்டியே திட்டமிட்ட உத்தியோகபூர்வ இராஜதந்திரப் பயணங்களை மேற்கொள்ளவிருப்பதால், அவரால் இந்த இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியான் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, இந்திய அரசாங்கத்தின் சார்பில் இரண்டு உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதை இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இந்திய அரசு சார்பில் பீகார் மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகிய இரு உயர்மட்டப் பிரதிநிதிகள் ஈரானிற்குச் சென்று இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், ஈரானுடனான நீண்டகால இராஜதந்திர மற்றும் வரலாற்று நட்புறவை நிலைநிறுத்தும் நோக்கில் இந்தியா இந்த உயர்மட்டப் பிரதிநிதிகளை அனுப்பவுள்ளமை சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
