ஈரான் தொடர்பு எண்ணெய் கப்பல்கள் 3 இந்திய கடலோரக் காவற்படையால் பறிமுதல்!

இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச கும்பலை இந்தியக் கடலோரக் காவற்படை (Indian Coast Guard) வெற்றிகரமாக முறியடித்துள்ளது. மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

🔍கடந்த பெப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், இந்தியக் கடலோரக் காவற்படை அதிநவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் வான்வழி சோதனைகளை மேற்கொண்டது. அப்போது இந்தியப் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய மூன்று கப்பல்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மூன்று கப்பல்களும் ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளானவை என்பது குறிப்பிடத்தக்கது:

1. Stellar Ruby (ஈரான் கொடியுடன் கூடிய கப்பல்)

2. Asphalt Star

3. Al Jafzia

இவற்றின் செயற்பாடாக மோதல் நிலவும் பகுதிகளில் இருந்து மலிவான விலைக்கு எண்ணெயை வாங்கி, நடுக்கடலில் வைத்து மற்ற கப்பல்களுக்கு மாற்றுவது (Ship-to-Ship transfer) இவர்களின் முக்கிய வேலை என கூறப்படுகிறது.

இத்தகைய சட்டவிரோதப் பரிமாற்றங்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சேர வேண்டிய இறக்குமதி வரிகளை இந்தக் கும்பல் ஏய்ப்பு செய்துள்ளது.

இந்தக் கப்பல்கள் அடிக்கடி தங்களது பெயர்களையும் அடையாளங்களையும் மாற்றிக் கொண்டு சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து தப்பித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த மூன்று கப்பல்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக மும்பை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு சுங்கத்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. “கடல்சார் பாதுகாப்பில் இந்தியா ஒரு வலுவான பாதுகாவலன்” என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.

________________________________________

நன்றி

Leave a Reply