யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரமுகர்கள் இன்றையதினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.
குறித்த விடயத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஏக்கியராஜ்ய அரசியலமைப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறை அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரவை மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ எங்கரநேசன் -தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் செ.கஜேந்திரன் -செயலாளர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, த.சுரேஸ் – தேசிய அமைப்பாளர், க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)
உத்தியோகபூர்வ பேச்சாளர் ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த மனுவைக் கையளித்தனர்.

மேலும் குறித்த சந்திப்பில் தீர்வின்றி நீடித்துவரும் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தவும் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணவும் வலியுறுத்தியும் மீனவர் தொடர்பில் தனியான மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

