36
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். அதேவேளை, முன்னாள் இராஜாங்க புலனாய்வு சேவையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2019 ஏப்ரல் 21ஆம் தேதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் 279 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் மற்றும் புலனாய்வு தொடர்புகள் இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அண்மைக் காலங்களில் விசாரணைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுரேஷ் சல்லே மீது தாக்குதலுடன் தொடர்புடைய சதி மற்றும் உதவி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவர் இதனை தொடர்ந்து மறுத்து வருகின்றார்.
