உலக நாடுகள் இடையே நியாயமான, வெளிப்படையான வர்த்தகம் தேவை: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல் | Minister Jaishankar says fair and transparent trade is needed between countries of the world

புதுடெல்லி: இந்​தி​யா, பிரேசில், சீனா உட்பட பல நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் வர்த்தக மற்​றும் வரி கொள்கை குறித்து ஆலோ​சிக்க பிரிக்ஸ் அமைப்​பின் காணொலி கூட்​டத்தை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கூட்​டி​னார்.

இதில் சீன அதிபர் ஜி ஜின்​பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்​றனர். வர்த்தக வரி​யால் இந்​திய உறவில் ஏற்​பட்ட விரிசலை சரிசெய்​யும் முயற்​சி​யில் அமெரிக்க அதிபர் ஈடு​பட்​டுள்​ளார். அதே​நேரம் பிரிக்ஸ் அமைப்​பின் கூட்டத்தை​யும் அமெரிக்கா​வுக்கு எதி​ரான சதி என்ற சந்​தேக கண்​ணோட்​டத்​தோடு அவர் பார்க்​கிறார்.

அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​துடன் சமநிலையை பின்​பற்ற வேண்​டும் என்ற நோக்​கத்​தில், பிரிக்ஸ் காணொலி கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​க​வில்​லை. அவருக்கு பதில் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் பங்​கேற்று பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: உலகின் இன்​றைய நிலை கவலை​யளிப்​ப​தாக உள்​ளது.

கரோனா பாதிப்​பு, ரஷ்​யா-உக்​ரைன் மோதல், மத்​திய கிழக்​கில் நடை​பெறும் சண்​டை, வர்த்தக மற்​றும் முதலீட்​டில் ஏற்படும் மாறுபாடு​கள், மோச​மான பரு​வநிலை மாற்​றங்​கள் போன்ற சவால்​களை உலக நாடு​கள் கடந்த சில ஆண்​டு​களாக சந்​தித்து வருகின்​றன. உலகில் உள்ள பன்​முக அமைப்​பு​கள் தோல்​வியடைந்து வரு​வது​போல் உள்​ளது.

பல முக்​கிய பிரச்​சினை​கள் புரிந்து கொள்​ளப்​படு​வது இல்​லை. அது குறித்து பேசப்​படு​வதும் இல்​லை. இதனால் உலகம் மோசமான விளைவு​களை சந்​தித்து வரு​கிறது. இது தொடர்பான ஒட்​டுமொத்த அக்​கறை காரண​மாகத்​தான், பிரிக்ஸ் அமைப்பு தற்​போது ஆலோ​சனை நடத்தி வரு​கிறது.

வர்த்​தகத்​துக்கு நிலை​யான மற்​றும் முன்பே கணிக்​கக்​கூடிய சூழலை உலகம் எதிர்​நோக்​கு​கிறது. பொருளா​தார நடை​முறை​கள் நியாய​மாக​வும், வெளிப்​படை​யாக​வும், அனை​வரும் பயனடை​யும் வகை​யிலும் இருக்க வேண்​டும். சர்​வ​தேச வர்த்தக நடை​முறை​களின் அடிப்​படை கொள்​கைகள் பாகு​பாடற்​ற​தாக இருக்க வேண்​டும், விதி​முறை​கள் பாது​காக்​கப்பட வேண்​டும் என்​ப​தில் இந்​தியா உறு​தி​யாக உள்​ளது. இவ்​வாறு மத்திய அமைச்சர் ஜெய்​சங்​கர் கூறி​னார்.

நன்றி

Leave a Reply