எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாடு நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, பிரன்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.