ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு, இந்தியாவும், ஜப்பானும் தகுதியான நாடுகள் என, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா வின், 80வது பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவும், ஜப்பானும் நிரந்தர உறுப்பினராவதற்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.
மேலும் , இன்றைய உலக நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நாவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அது பயனுள்ள அமைப்பாக இருக்க வேண்டும் என்றால், கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திறன்கள் மற்றும் தலைமை பண்பிற்காக, இந்தியாவும், ஜப்பானும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் எனவும் இதுதவிர ஏனைய திறமையான முன்னணி நாடுகளும் கவுன்சிலில் இடம் பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றும் அமைப்பாக இல்லாமல், உறுதியான முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்தும் அமைப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் பூட்டான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.