சவுத்தாம்ப்டனில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்களை எடுத்தது.
இது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஐந்தாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
இன்னிங்ஸில் ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் சதங்களை அடித்தனர்.
ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை எடுத்தார்.
தொடக்க வீரர் ஜேமி ஸ்மித்தும் 48 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, 20.5 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பரபரப்பான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டு தனது முதல் ஐந்து ஓவர்களில் 05 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒன்பது ஓவர்களில் அவர்களில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
மேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் மூன்று விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா களத்தடுப்பு பணியின் போது காயமடைந்தமையினால் துடுப்பாட்டம் மேற்கொள்ளவில்லை.
2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.
இதுவரை பல அணிகள் அதிகபட்ச விக்கெட் வித்தியாசத்தில் (10) வெற்றி பெற்றுள்ளன.
ஆனால் இதுவே அதிகபட்ச ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தருணமாகும்.
எவ்வாறெனினும் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.