9
மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன.
சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது.அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவ்வாறு காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் தீவப்பகுதிக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு கடந்த 26ஆம் திகதி இரவு அப்பகுதி மக்களும் கத்தோலிக்க மதகுருமாரூம் தீவின் வாயிலில் நின்று போராட்டம் நடத்திய பொழுது, அவர்கள் மீது போலீசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டார்கள்.இதில் பெண்களும் மத குருமார்களும் தாக்கப்பட்டார்கள்,அவமதிக்கப்பட்டார்கள்.இதன் விளைவாக அங்குள்ள மக்கள் கடந்த திங்கட்கிழமை பொது முடக்கத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.
மன்னாரில்,குறிப்பாக கனிமவள அகழ்வுக்கு எதிரான போராட்டத்தில் யாருமே கேள்விகளை எழுப்புவதில்லை. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அபிப்பிராயம் எல்லாத் தரப்புக்களிடமும் உண்டு.ஆனால் காற்றாலை விடயத்தில் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை அல்ல என்ற ஒரு விமர்சனம் ஒரு பகுதி தமிழ் மக்கள் மத்தியிலேயே உண்டு.
மன்னார் தீவில் காற்றாலைகள் நிறுவப்பட்டதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மழைக் காலங்களில் தங்களுடைய வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதாக,கடற்தொழில் பாதிக்கப்படுவதாகவும், காற்றாடிகள் சுற்றும் சத்தம் அதிகமாக இருப்பதாகவும் முறைப்பாடு செய்கின்றார்கள். இது போன்ற முறைப்பாடுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் கடந்த வாரம் அப்பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் மீள உறுதிப்படுத்தியது.
நாட்டின் அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதனால் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை அரசாங்கம் நிறுவி வருகின்றது.இந்த அடிப்படையில் ஏற்கனவே வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலங்கள் கடன் அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன.இந்த மின்கலங்களைப் பொருத்துவதன் மூலம் குறிப்பிட்ட பயனாளி லாபமடைகிறார். அதனால் வரும் வருமானம் அவருடைய வீட்டுத் தேவைகளுக்கான மின் பாவனைக் கட்டணத்தை முழுமையாக இல்லாமல் செய்கின்றது.தவிர,மாதாமாதம் மேலதிகமாக லாபமும் கிடைக்கும்.அந்த லாப நோக்கமானது அவர்களை அறியாமலேயே பசுமை மின்சக்தித் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றது.
உலகம் முழுவதும் பசுமை மின்சக்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.மனித நாகரீகம் என்பதே இயற்கையை சுரண்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது.எனவே இயற்கை சுரண்டாமல் அபிவிருத்தி இல்லை. இந்த விடயத்தில் இயற்கையின் சமநிலை கெடாமல் எப்படி அபிவிருத்தி செய்வது என்று சிந்தித்து கண்டுபிடிக்கப்பட்டவைதான் சூழல் நேயத் திட்டங்கள்.வளர்ச்சி அடைந்த நாடுகளில் காற்றாலைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு வருகின்றன.அண்மையில் ஸ்பெயின் நாடானது நாட்டின் ஒருநாள் மொத்த மின் பாவனையை முழுக்கமுழுக்க பசுமை மின்சக்தியின் மூலம் பூர்த்தி செய்து சாதனை செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
மேலும்,ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பாக வந்த விமர்சனங்களை உள்வாங்கி புதிதுபுதிதாக மாற்று ஏற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.குறிப்பாக காற்றாலை விசிறிகளில் பட்டு வலசைப் பறவைகள் இறப்பது தொடர்பான விமர்சனத்தை உள்வாங்கி செட்டைகள் இல்லாத காற்றாடிகள் எப்பொழுதோ உருவாக்கப்பட்டு விட்டன. ஜெர்மனி இந்த விடயத்தில் முன்னோடியாகக் காணப்படுகிறது. அதுபோலவே அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி காற்றாலைகளின் செட்டைகளில் ஒன்றைக் கறுப்பாக்கினால் அங்கே கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை 70%தால் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு காற்றாலை மின் சக்தியின் சூழல்நேயப் பண்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு ஐரோப்பா முன்னேற்றகரமான புதிய காற்றாடிகளைக் கண்டுபிடித்து வருகிறது. இப்படிப்பட்டதோர் உலக மற்றும் உள்நாட்டுச் சூழலில்,மன்னார் மக்கள் ஏன் காற்றாலைகளை எதிர்க்கிறார்கள் என்று ஒரு பகுதியினர் கேள்வி கேட்கின்றார்கள்.
இங்கே முக்கியமாக இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். மன்னார் மக்கள் மன்னாரின் தீவுப்பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள். யாரும் சூரிய மின்கலங்களை எதிர்ப்பதாகத் தெரியவில்லை.
இந்த விடயத்தில் காற்றாலை தொடர்பான மன்னார்த் தீவு மக்களின் கவலைகளை சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள்,அதிகாரிகள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்கள் கேட்கவேண்டும்.இதில் மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா என்று சிந்திக்க வேண்டும்.இது தொடர்பாக அரசாங்கம் 19.08.2025 அன்று நியமித்த சிறப்புக் குழு கடந்த மாதம் முதலாந் திகதியன்று (01.09.2025) அங்குள்ள சிவில் சமூகத்தோடு(MCC) உரையாடியதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எனினும் மக்களுடைய பயங்களைப் போக்க முடியவில்லை.
காற்றாலைகள் ஏன் வேண்டாம் என்பதற்கு மன்னார் தீவுப்பகுதி மக்கள் கூறும் காரணங்கள் எவையாகவும் இருக்கலாம்.ஆனால் காற்றாலைகள் ஏன் வேண்டும் என்பதற்குக் கூறப்படும் பிரதான காரணத்திலிருந்து சிந்தித்தால் அந்த மக்களின் பயத்தைப் போக்க வேண்டியது அவசியம். சூழல்நேய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் அந்தச் சூழலில் வாழும் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சூழலுக்கு அந்த அபிவிருத்தித் திட்டம் முழுமையாக நேசமானதாக அமையும். அந்த மக்களின் விருப்பமின்றி அதை அங்கே பலவந்தமாக நிறுவ முடியாது. அப்படி நிறுவினால் சூழல்நேய அபிவிருத்தி என்ற அடிப்படைச் சிந்தனை கேள்விக்குள்ளாகிவிடும்.எனவே ஒரு பகுதி மக்கள் அதை எதிர்க்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பயங்களை,கவலைகளைப் போக்க வேண்டிய, மாற்று ஏற்பாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு.அதுதொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைக்கு உண்டு.
மன்னாரில் காற்றாலைகளை முதலில் நிறுவ முற்பட்டது அதானி குழுமம் ஆகும். ஆனால் அது தொடர்பான லாப நட்டப் பேரங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதானி குழுமம் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறி விட்டது.இப்பொழுது உள்நாட்டு நிறுவனம் ஒன்று காற்றாலைகளை நிறுவி வருகிறது.
இங்கு அரசியல் முரண் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.அதானி குழுமம் மன்னாரில் காற்றாலைகளை நிறுவ முற்பட்டபொழுது அதனை ஜேவிபியும் உட்பட அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எதிர்த்தார்கள்.காலி முகத்திடலில் “கோட்டா கோகம” கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது.அது அதானி குழுமத்தின் முதலீடுகளை எதிர்த்தது. இதுதொடர்பாக ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு கத்தோலிக்கம் மதகுருவோடு உரையாடினார்.”நீங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக போராடுகிறீர்கள் என்று சொன்னால்,ஜேவிபியின் முன்னைய நிலைப்பாடுகளில் ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். ஜேவிபியின் முன்னைய நிலைப்பாட்டின்படி மலையகத் தமிழர்களை அவர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் கண்டார்கள். அப்படியென்றால் அரகலயப் போராட்டமும் மலைகத் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்றதா?” என்று அவர் கேட்டார்.அந்தக் கத்தோலிக்க மதகுரு அதை மறுத்தார்.”இல்லை நாங்கள் எல்லாவிதமான விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானவர்கள்”என்று சொன்னார்.அப்படியென்றால் சீனா ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்துக்கு அருகிலும் வந்துவிட்டது.அந்தச் சீன விஸ்தரிப்பு வாதம் தொடர்பாகவும் நீங்கள் பேசுவீர்களா?என்று அந்தத் தமிழ்ச் செயற்பாட்டாளர் கேட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதானியின் முதலீட்டை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு பகுதி என்று எதிர்த்த அரகலய போராட்டங்களின் குழந்தைதான் இப்போதுள்ள என்பிபி அரசாங்கம்.ஆனால் அது காற்றாலை வேண்டாம் என்று கேட்டுப் போராடிய மன்னார் மக்களின்மீது பலத்தைப் பிரயோகித்துள்ளது. அதற்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் அரகலய போராட்டத் தலைவர்களும் இணைந்திருக்கிறார்கள். இதன்மூலம் என்பிபி வேறு தாங்கள் வேறு என்று அவர்கள் காட்டக்கூடும்.
காற்றாலைகளின் விடயத்தில் தமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய அளவுக்கு எதிர்ப்புக் காட்ட வில்லை என்ற ஒரு குறை மன்னார் மாவட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முன்பு இருந்தது.அப்பகுதி அரசியல் தலைமைத்துவம் இது தொடர்பில் மக்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது.அதனால் அங்கு ஏற்கனவே பலமாக உள்ள மதத் தலைமைத்துவதின் வழிகாட்டலே தீர்மானகரமானதாகக் காணப்படுகின்றது.
எனினும் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,பொது வேட்பாளரை முன்னிறுத்திய அணி மன்னாரில் நகரப் பகுதியில் நடத்திய பெரிய ஒருவர் அங்கே மன்னார் மக்களின் கவலைகளைப் பிரதிபலித்தார். காற்றாலை,கடலட்டை இரண்டும் ராஜதந்திரப் பொருட்களாகி விட்டன என்று கூறிய அவர், காற்றாலை,கடலட்டை,கனிமவள அகழ்வு போன்றவை தமிழ் மக்களின் நில உரிமை,கடல் உரிமை போன்ற கூட்டு உரிமைகளோடு சம்பந்தப்பட்டவை என்றும்,எனவே அதில் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவுகள் எடுக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
இப்பொழுது அரசாங்க மக்கள் மீதும் மதகுருக்கள் மீதும் பலப் பிரயோகத்தைச் செய்த பின் விவகாரம் உணர்ச்சிகரமானதாகி விட்டது. தமிழ்த்தேசியக் கட்சிகளும் உட்பட பெரும்பாலான கட்சிகள் மன்னார் மக்களின் பக்கம் நிற்கின்றன.இப்பொழுது போராட்டம் பரந்தளவில் மக்கள் மயப்பட்டுவிட்டது.அரசாங்கத்தின் பலப்பிரயோகம் அதைப் பலப்படுத்தி விட்டது. தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக வந்த ஓர் அரசாங்கம் இந்த விடயத்தில் என்ன முடிவை எடுக்கும்? தனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜனாதிபதி கதைத்த கவர்ச்சியான,அலங்காரமான சொற்களைக் கொண்ட உரைகள் யாவும், கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மக்கள் மீது போலீசார் பலத்தைப் பிரயோகித்தபோது பொருள் இழந்து போய்விட்டன.