கனடா மத்திய அரசில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்தி, ஆயிரக்கணக்கான அரச வேலைவாய்ப்புகளைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான கானடா அரசாங்கம், தனது புதிய வரவு செலவுத் திட்டத்தில் 40,000 பொதுத்துறை வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
இந்த வேலைகளை ஈடுசெய்ய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திணைக்களத்தில் (ESDC) மட்டும் 2029-ஆம் ஆண்டிற்குள் சுமார் 15,629 பணியாளர்கள் குறைக்கப்படவுள்ளனர்.
உள்நாட்டுச் செயல்பாடுகளைத் தானியக்கமாக்குவதன் (Automation) மூலம் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முடியும் என அரசு வாதிடுகிறது.
அரசாங்கத்தின் இந்த அதிரடித் தீர்மானத்திற்கு கானடாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கங்களான PSAC மற்றும் PIPSC கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“வேலைகளைக் குறைப்பதால் பணிச்சுமை குறைந்துவிடாது; இது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தைப் பாதிக்கும்” என PSAC-இன் தேசிய நிறைவேற்றுத் துணைத் தலைவர் அலெக்ஸ் சிலாஸ் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த வேலைநீக்கங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்தச் சிக்கன நடவடிக்கை காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் என ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
இதேவேளை, 2029-ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களத்தில் (ECCC) 1,400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நீக்கப்படவுள்ளன.
குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் ‘குறைந்த கார்பன் பொருளாதார நிதி’ (Low Carbon Economy Fund) போன்ற முக்கிய திட்டங்கள் நிறுத்தப்படவுள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் ஏனைய சவால்கள் காரணமாக இத்தகைய கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாக அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்காலிக நிதியுதவி பெறும் பல சுற்றுச்சூழல் திட்டங்கள் இனி புதுப்பிக்கப்படாது என்பதால், கானடாவின் சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என கிரீன்பீஸ் (Greenpeace) போன்ற அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
