காஸா ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது

அல் ஜெஸீரா வலையமைப்புக்காக காஸாவிலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர் அனஸ் அல் ஷரீப் உட்பட ஐவர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அனஸ் அல் ஷரீப், முஹம்மது அல்-கால்தி ஆகிய ஊடகவியலாளர்களும் முஹம்மது குரைதா, இப்ராஹிம் ஸாஹிர், மொஹம்மது நௌபல் ஆகிய கமரா உதவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளுடன் சேர்த்து 2023 ஒக்டோபர் 7 முதல் இன்று வரை பலஸ்தீனில் 270 ஊடகவியலாளர்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

காஸாவில் இஸ்ரேல் அரங்கேற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தமது உயிரையும் துச்சமென மதித்துச் செயற்பட்டு வந்த இந்த ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்ததானது, உண்மையை மூடிமறைத்து, காஸாவின் கொடூரமான கள யதார்த்தத்தை உலகம் அறிந்துகொள்வதைத் தடுப்பதற்கான இஸ்ரேலின் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

ஊடகவியலாளர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குவதானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இந்தத் தாக்குதல் தனிநபர்கள் மீதான தாக்குதல் மட்டுமன்றி, ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் தகவல் அறியும் உரிமை ஆகிய அடிப்படை கொள்கைகள் மீதான நேரடித் தாக்குதலுமாகும். 

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதுடன் காஸாவில் தமது கடமைகளைச் செய்யும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இஸ்ரேல் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். இந்த கொடூரமான செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் சர்வதேச சமூகத்தால் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

அனஸ் அல் ஷரீப் மற்றும் அவருடன் இணைந்து கொல்லப்பட்ட சக ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் காஸாவிலிருந்து செய்தி சேகரிக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.

மிகப் பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காக இந்த ஊடகவியலாளர்கள் காண்பித்த துணிச்சலும் அர்ப்பணிப்பும் ஒருபோதும் வரலாற்றில் மறக்கப்படாது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

நன்றி

Leave a Reply