மஹரகம பொலிஸார் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளின் சிறப்பு நடவடிகையில் தொடர்ச்சியான திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் சம்பவத்தில் மஹரகம, கொடிகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரை, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு போலி எண் தகடுகளுடன் மஹரகம பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர் கொட்டாவ, கெஸ்பேவ மற்றும் மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதிகளில் பல வீடுகள் உடைத்தல் மற்றும் திருட்டுகளுடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.
இவரிடமிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொலைக்காட்சி, கமரா மற்றும் ஐந்து மொபைல் போன்களை பொலிஸார் மீட்டனர்.
மற்றொரு நடவடிக்கையில், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக பல பிடியாணைகளில் தேடப்படும் 47 வயது சந்தேக நபரைக் கைது செய்தது.
குறித்த நபர் மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார்.
பெப்ரவரி 25 ஆம் திகதி மஹார சிறைச்சாலையிலிருந்து வத்தளை நீதிவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் போலியான தேசிய அடையாள அட்டையை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராகம, கந்தானை, மினுவாங்கொடை மற்றும் சபுகஸ்கந்த ஆகிய இடங்களில் நடந்த பல ஆயுதக் கொள்ளைகளில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
அவருக்கு எதிராக நான்கு பிடியணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.