கொழும்பில் இனிமேல் சொந்தமாக வீடு வாங்க முடியாதா…?

சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு வாங்குவதற்கு, உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் கட்டுப்படியாகாத நகரமாக இலங்கைத் தலைநகர் கொழும்பு தரப்படுத்தப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டிற்கான ‘Numbeo’ சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் (Numbeo Property Investment Index) அண்மைக்கால தரவுகளின்படியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

கொழும்பில் உள்ள வீடுகளின் விலைக்கும் வருமானத்திற்குமான விகிதம் (Price-to-Income Ratio) 55.1 ஆகப் பதிவாகியுள்ளது. உலகெங்கிலும் கண்காணிக்கப்பட்ட 395 நகரங்களில் இதுவே மிக அதிகப்படியான விகிதமாகும். 

காத்மாண்டு (39.2) பிலிப்பைன்ஸின் மணிலா (35.9) மும்பை (33.3)  சிங்கப்பூர் (22.1) போன்ற நகரங்களை விடவும் கொழும்பில் வீடு வாங்குவது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. 

கொழும்பில் வசிக்கும் ஒரு சராசரி குடும்பத்தின் மாத வருமானத்திற்கும், அங்குள்ள நிலத்தின் அல்லது கட்டிடங்களின் விலைக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பில் ஒருவரின் சராசரி மாத வேதனம் சுமார் 70,452 ரூபாவாகக் காணப்படும் நிலையில், நகரின் மையப்பகுதியில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை சுமார் 108,442 ரூபாவாக உள்ளது. 

அதாவது, ஒரு நபர் தனது ஒரு மாத முழுச் சம்பளத்தைக் கொடுத்தாலும் கூட, கொழும்பு நகரில் ஒரு சதுர அடி நிலத்தைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

வீடு வாங்குவது கடினமாகியுள்ளதால், மக்கள் வாடகை வீடுகளை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகைக் கட்டணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளன. 

கொழும்பு நகரில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி மாத வாடகை 131,386 ரூபாவாகும். இது ஒரு சராசரி ஊழியரின் மாதச் சம்பளத்தை விடவும் இருமடங்கு அதிகமாகும். 

அதிகரித்து வரும் சொத்துக்களின் விலை மற்றும் வங்கிக் கடன் வட்டி வீதங்கள் (சராசரியாக 12.94%) காரணமாக, கொழும்பில் நடுத்தர வர்க்கத்தினர் சொந்தமாக வீடு வாங்குவது என்பது புள்ளிவிபர ரீதியாக ஷங்காய், ஹொங்கொங் அல்லது மும்பையை விடவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நன்றி

Leave a Reply