சானி அபேசேகர இல்லாமல் இருந்திருந்தால், நான் இன்றும் சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்கும் – Dr சாபி

தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக வெளியாகிய செய்தியால் நானும், எனது குடும்பத்தாரும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டோம்.பொது இடங்களுக்கு செல்லும் போது ‘இவர் தான் அந்த கருத்தடை வைத்தியர் சாபி’ என்று என்னை பார்த்து பலரும் சொன்னார்கள். அதிகாரத்துக்கு வருவதற்காக என்மீது முன்வைத்த குற்றச்சாட்டை கர்மவிணை குறுகிய காலத்துக்குள் போலியாக்கியது. பேராசியர்கள் என்று குறிப்பிட்டுக்கொண்டு என்னை குற்றஞ்சாட்டியவர்கள் கர்மவினையால் இன்று காணாமல் போயுள்ளார்கள். அவர்களின் நிலையை கண்டு கவலையடைகிறேன் என  வைத்தியர் சாபி சஹாப்தீன் தெரிவித்தார்.

நான் கருத்தடை செய்யவில்லை. இதுவரை காலமான முறைமை தான் கருத்தடை செய்தது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் பிறப்பு வீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் வீதம் இலட்சக்கணக்கில் குறைவடைந்துள்ளது.இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். பிறப்பு வீதம் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் பிரதான அங்கமாக காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.இனவாதமற்ற நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற ‘ ரன் தோனி’ நூல் வெளியீட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கலாவெ வ எனும் அழகிய  சிறு கிராமத்தில் சக இனமக்களுடனும் சகோதரத்துவத்துடனும் இனவாதத்தை முழுமையாக புறக்கணித்து வாழ்ந்த மனிதன் நான். இனவாதம் என்பது புற்றுநோய் போன்றது. இனவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்காமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளேன்.

சிறிய கிராமத்தில் இருந்து கடினமான சூழ்நிலைக்கு மத்தியில் அப்பாவி நோயாளர்களுக்கு சேவையாற்றி அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று வைத்திய துறையில் சிறந்த முறையில் சேவையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் 2019 ஆம் ஆண்டு துயரமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டேன்.

 2019.05.23 ஆம் திகதியன்று தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக செய்திகள் வெளியாகின. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அன்று இந்த செய்தி தொடர்பில் அழுத்தமாக குரல் எழுப்பினார்.

இந்த செய்தி தொடர்பில் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ‘அவ்வாறு இருக்க முடியாது, இதன் யதார்த்தத்தை குறிப்பிடுங்கள்’ என்று எவ்வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் எனக்காக பேசினார். வெளியாகிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எனக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. என்னை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 4ஆம் மாடிக்கு ஒப்படைத்தார்கள். அப்போதைய பணிப்பாளராக சானி அபேசேகர இருந்தார்.

சானி அபேசேகர போன்ற நபர் இல்லாமல் இருந்திருந்தால் என்னை போன்ற அப்பாவி மனிதன் இன்றும் சிறையில் இருந்திருக்க நேரிட்டிருக்கும். 20-25 ஆண்டுகள் என்னை சிறையில் வைப்பதற்காகவே கைது செய்தார்கள் என்று வியத்மக அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார். செய்த புண்ணியத்தால் விடுதலையானீர்கள் என்றும் குறிப்பிட்டார்.

கடுமையான நிபந்தணைகளுடன் தான் எனக்கு பிணை வழங்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கொழும்பிலும் இருக்க முடியவில்லை. கல்முனைக்கு சென்றேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வந்து கையொப்பமிட வேண்டும். பொது போக்குவரத்து ஊடகங்களில் வர முடியாது. அவ்வாறு வரும்போது ‘இவர் தான் அந்த கருத்தடை செய்த வைத்தியர் சாபி’ என்றார்கள்.

பொருளாதார நெருக்கடியின் போது எனது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மாத சம்பளமும் முடக்கப்பட்டது. பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தேன்.எனக்கு எதிரான ‘ பி’ அறிக்கை விசாலமானது. இந்த பி அறிக்கையை சாதனை என்றே குறிப்பிட வேண்டும். இவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அதிகாரத்துக்காக மக்களை கொன்றார்கள். நான் அரசியல் செய்யவில்லை. எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானவன் இல்லை. நாட்டுக்கு நல்லது நடக்குமாயின் அந்த இடத்தில் இருப்பேன்.

நாம் அனைவரும் கண்ட கனவு தற்போது நனவாகியுள்ளது. இனவாதமற்ற நாடு உருவாகியுள்ளது. மனிதாபிமானத்தை பாதுகாத்து இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை முன்னேற்றுவதற்கு ஒன்றுபடாவிடின் எதிர்கால தலைமுறையினருக்கு அழகான இலங்கையை கையளிக்க முடியாத நிலை ஏற்படும்.

2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது தாய் என்னை இங்கு இருக்க இடமளிக்கவில்லை. ‘ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. நீ இங்கு இருக்க வேண்டாம், உன்னை கொல்வார்கள். அதிகாரத்துக்காக 300 பேரை கொன்றவர்களுக்கு, நீ யார்’ என்று குறிப்பிட்டு என்னை இங்கு இருக்க இடமளிக்கவில்லை. இதன் பின்னர் நான், என் மனைவியுடன் பிரித்தானியா சென்றேன்.

அங்கு இருக்க மனம் இடமளிக்கவில்லை. மாற்றம் ஒன்று ஏற்பட போகிறது என்று மனம் சொன்னது.  24 ஆம் திகதி விமானம் இருந்தது. நான் 19 ஆம் திகதி நாட்டுக்கு வந்து 24 ஆம் திகதி மாற்றத்துக்கான ஒத்துழைப்பை வழங்கினேன்.

என்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களால் வைத்தியர் என்ற ரீதியில் பல துயரங்களுக்கு முகங்கொடுத்தேன். எனது குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டார்கள்.அவற்றை ஒருபோதும் மீட்ட முடியாது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு என்னை அனுப்பிய இறுதி நாளன்று நான் சி.ஐ.டியின் அப்போதைய பணிப்பாளரிடம் சென்று ‘ சேர் சிறைச்சாலையில் 3 அல்லது 2 சிறைகூடுகளில் உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு 2 கழிப்பறைகளே உள்ளன. அவற்றை புனரமைக்க எனக்கு வாய்ப்பளியுங்கள்’ என்று குறிப்பிட்டேன்.

‘இது சிறந்த யோசனை, நீங்கள் விடுதலையானால் இந்த யோசனையை பொலிஸ்மா அதிபருக்கு அறிவியுங்கள். அப்போது நான் இந்த பதவியில் இருந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்’ என்று சானி அபேசேகர குறிப்பிட்டார்.

சுமார் 3 வருடங்களுக்கு மேலாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பௌத்த அற கோட்பாட்டுக்கமைய கர்மவிணை கண்முன் பலவற்றை உறுதிப்படுத்தியது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட சம்பள தொகை எனக்கு கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைகளில் அடிப்படை தேவைகள் கூட நெருக்கடியாகியிருந்தது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் எனக்கு 24 இலட்சம் ரூபா நிலுவை சம்பளம் கிடைக்கப்பெற்றது. இந்த பணத்தை என்ன செய்யலாம் என்று நான் எனது மனைவியுடன் கலந்துரையாடினேன்.கடமையின் போது மேலதிக நேர கொடுப்பனவை பெற்றாலும் நாங்கள் அதனை பயன்படுத்துவதில்லை.  நானும் எனது மனைவியும் மேலதிக நேர கொடுப்பனவை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்போதும், ஒருபோதும் அந்த மேலதிக கொடுப்பனவை நாங்கள் எமது தேவைக்கு பயனபடுத்தவில்லை.

கடமை செய்யாமல் இந்த பணம் கிடைக்கப்பெற்றது ஆகவே அந்த நிதியை நன்கொடையாக வழங்குங்கள் என்ற எண்ணம் இறைவனால் எமது சிந்தனைக்கு அறிவுறுத்தப்பட்டது. கோடி கணக்கில் பெறுமதியான மருத்துவ உபகரணத்தை நிறுவனத்துடன் தொடர்புக்கொண்டு 24 இலட்சத்துக்கு நாங்கள் பெற்றுக்கொடுத்தோம். பிரபல்மடைய வேண்டும் என்பதற்காக நான் இவற்றை குறிப்பிடவில்லை. இலங்கையில் எதிர்மறையான கருத்துக்களால் பிரபல்யமான நபர் நான்.

இன்று பலர் என்னுடன் அன்பாக பேசுகிறார்கள். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு ஏன் செல்லவில்லை என்று என்னிடம் பலர் கேட்டார்கள். அன்று பேராசிரியர்கள் என்று குறிப்பிட்டுக்கொண்டு  இனவாதத்தை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக என்னை இலக்குப்படுத்தியவர்கள் பௌத்த மத கோட்பாட்டினால் குறுகிய காலத்துக்குள் தண்டிக்கப்பட்டார்கள், காணாமலாக்கபட்டார்கள். அவர்களின் நிலையை கண்டு கவலையடிகிறேன். கர்மவினை அனைத்தையும் வெளிப்படுத்தியது.

இந்த நாட்டுக்கு பயன் சேர்க்கும் வகையிலும், ஏழைகளுக்கு சேவையாற்றும் வகையில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே என் பிள்ளைக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். இனத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

இன்று நாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோம்.அரசாங்கத்துக்கு மனமார்ந்த வகையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் தான் நான் இன்றும் சேவையாற்றுகிறேன். குருநாகல் வைத்தியசாலையில் ஆரம்பத்தை காட்டிலும் தற்போது  பிரசவ எண்ணிக்கை குறைந்துள்ளது. தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் வீதம் இலட்சக்கணக்கில் குறைவடைந்துள்ளது.

நான் கருத்தடை செய்யவில்லை. இதுவரை காலமான முறைமை தான் கருத்தடை செய்தது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் பிறப்பு வீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். பிறப்பு வீதம் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் பிரதான அங்கமாக காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

 (இராஜதுரை ஹஷான்)

நன்றி

Leave a Reply