சீனா மீது கூடுதல் 100 சதவீத வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தமது நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என அறிவித்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரியை உயர்த்தினார்.

இதற்கு பதிலாக சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் அமெரிக்கா அறிவித்தது.

அதன்படி, சீனா மீதான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்ததோடு, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.

மேலும் 90 நாட்கள் வரிவிதிப்பு நிறுத்தமானது, ஒகஸ்ட் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, கால அவகாசம் கூடுதலாக 90 நாட்களுக்கு (நவம்பர் 10) வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (11) அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் ஏற்கனவே சீன பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 130 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், தற்போது சீன ஜனாதிபதியை சந்திக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply