சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (09) அன்று கிழக்கு நேரப்படி மாலை 5:00 மணிக்கு தாக்குதல்களைத் தொடங்கின என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்புக்கு தகுந்த பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்ட்காம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பாரசீக வளைகுடாவின் கடற்கரை மற்றும் ஹார்முஸ் நீரிணை நெடுகிலும் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.

விபத்துக்குள்ளான அமெரிக்க அப்பாச்சி ஹெலிகொப்டரின் இரண்டு பணியாளர்களும் அமெரிக்க கடல் ட்ரோன் மூலம் மீட்கப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்தது. 

ஈரான் இந்தத் தாக்குதலை நடத்த ஒரு ட்ரோனைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளின் கூறுகின்றனர்.

ஆனால், ஈரானிய ட்ரோன் வேண்டுமென்றே ஹெலிகொப்டரைத் தாக்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதேவளை, ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கோ அல்லது அச்சுறுத்தலுக்கோ பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவை எச்சரித்தார்.

தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் ஒரு பரந்த உடன்படிக்கையை எட்டுவதற்கான முயற்சிகள் தொடரும் நிலையில் இந்த புதிய தாக்குதல் தொடங்கியுள்ளது.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது, உலகெங்கிலும் எரிசக்தி விலைகளை உயர்த்தியுள்ளது, மேலும் உணவு உட்பட பல அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாத போர் நிறுத்தத்தை, மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தமாக மாற்ற அதிகாரிகளால் முடியவில்லை. 

குறிப்பாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போராளிக் குழுவிற்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி விரிவுபடுத்தி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply