சுவிற்சலாந்தின்  நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.

 

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சுவிற்சலாந்து ஏற்படுத்திக் கொடுத்தது. சுவிற்சலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது துறைசார் நிபுணர்களும் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக கடந்த வாரம் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதுவரின் இடத்தில் காலை உணவோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதில் அழைக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை.

சுவிற்சலாந்து ஏன் இந்த விடயத்தில் ஆர்வமாக காணப்படுகிறது? ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில இலங்கையில் உள்ள பௌத்த மகா சங்கங்களில் உள்ள ஒரு பிரிவினரோடு இணைந்து “இமாலய பிரகடனம்”என்ற ஒரு பிரகடனத்தை வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்த பிரகடனத்தின் பின்னணியில் சுவிற்சலாந்தே இருந்ததாக அவதானிப்புகள் உண்டு. கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தில் முன்பு பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜதந்திரி ஒருவர் இமாலய பிரகடனத்தை உருவாக்கும் முயற்சிகளில் பின் இருந்து உழைத்ததாக கருதப்படுகிறது.அதற்கு வேண்டிய நிதி அனுசரணையையும் சுவிற்சலாந்தே வழங்கியதாக ஊகிக்கப்பட்டது.

ஆனால் ஹிமாலிய பிரகடனம் தோற்றுவிட்டது. அதைத் தயாரித்த புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் அங்குள்ள தமிழர்களின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன. குறிப்பாக கனடாவில் அந்த பிரகடனத்துக்காக உழைத்த கனேடிய தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்புக்கு எதிராக அங்குள்ள ஏனைய எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஒன்று திரண்டன. இமாலய பிரகடனம் சொதப்பிய பின் சுவிற்சலாந்து மறுபடியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மற்றொரு நகர்வை முன்னெடுக்கின்றது.

சுவிற்சலாந்துக்கும இலங்கைக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து வரும் ஆண்டுடன் எழுபதாவது ஆண்டு முடிவடைகிறது.அதையொட்டி இலங்கைத் தீவில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சுவிற்சலாந்து ஆர்வமாக இருப்பதாக உத்தியோகபூர்வமாக கூறப்படுகிறது.

ஆனால் அதுவல்லாத ராஜதந்திர இலக்குகள் அங்கே இருக்கலாம் என்று ஊகிக்க முடியும். சக்திமிக்க மேற்கு நாடுகளின் ஆலோசனைகள் இன்றி சுவிற்சலாந்து தன்னிச்சையாக இதுபோன்ற சமாதான முயற்சிகளில் இறங்காது. ஏனென்றால் இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தைக் கருதிக் கூறின் இங்கு சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது நன்னோக்கத்தின் அடிப்படையில் மட்டும் இருக்க முடியாது.அதைவிட ஆழமான பொருளில் அங்கே சக்திமிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார,ராணுவ,ராஜதந்திர இலக்குகள் இருக்க முடியும்.

போரைப் போலவே சமாதானமும் ஓர் அரசியல் நடவடிக்கைதான்.போரைப் போலவே சமாதானத்திலும் ராஜதந்திர இலக்குகள் இருக்கும். சமாதானத்திலும் நிலையான நலன்கள் இருக்கும். சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் தேவ தூதர்கள் அல்ல. அவர்கள் ராஜதந்திரிகள்தான்.அவர்கள் தந்திரமாகத்தான் நடப்பார்கள்.வெளிப்படையாக கதைக்க மாட்டார்கள். உள்நோக்கங்களை வெளிப்படுத்த மாட்டார்கள்.

கடந்த 16 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அரசியலானது பெரும் போக்காக ஐநா மைய அரசியலாகக் காணப்படுகிறது. ஆனால் அதிலும் இப்பொழுது ஈழத் தமிழர்களுக்கு சலிப்பும் வெறுப்பும் சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது.சில கிழமைகளுக்கு முன்பு செம்மணி வளைவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரூடைய அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களால் எரிக்கப்பட்டது. எந்த மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு வரக் கேட்டு ஒரு விளக்கை ஏற்றி மூன்று நாட்கள் அணியாமல் வைத்திருந்தார்களோ, அதே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அதே செம்மணி வளைவில் வைத்து எரிக்கும் ஒரு நிலைமை. அதாவது ஈழத் தமிழர்கள் ஐநா மைய அரசியலில் ஏமாற்றம் அடைய தொடங்கி விட்டார்கள் என்பதனை அது காட்டுகிறது.

இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், சுவிற்சலாந்தின் புதிய நகர்வுகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கின. ஏற்கனவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமாலய பிரகடனத்தின் பின்னால் இருந்த அதே நாடு இப்பொழுது மீண்டும் இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

சுவிற்சலாந்து  உலகின் சமஸ்டி முன்னுதாரணங்களில் பிரதானமான ஒரு நாடாக கருதப்படுகிறது.எனவே அப்படிப்பட்ட ஒரு நாடு நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அது மிக உயர்வான ஒரு சமஸ்டி தீர்வை ஆதரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளின்படி குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பின்போது அரச பிரதி கூறியவற்றின் அடிப்படையில் சிந்தித்தால்,”எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற யாப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால வரைபுதான் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பதாகத் தெரிகிறது.

சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட அரச பிரதிநிதி ஒரு விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார். இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணையும் உண்டு என்பதேஅது.ஏனென்றால், நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் உருவாக்கப்பட்டதே புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு ஆகும்.

நிலைமாறு கால நீதி என்பது ரணில்-மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து ஐநா முன்வைத்த ஒரு தீர்வு. நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் ஏனைய உபகுழுக்களும் உருவாக்கப்பட்டன.இக்குழுக்களில் அப்பொழுது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகித்தார்கள்.ஜேவிபியும் அங்கம் வகித்தது.

அக்காலகட்டத்தில் சம்பந்தர் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைக் கூறி வந்தார். அதற்கு முன் தயாரிக்கப்பட்ட எல்லா யாப்புக்களும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை. ஆனால் தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படுவது அதுதான் முதல் தடவை என்றும் அவர் சொன்னார். ஆனால் அந்த யாப்புருவாக்க முயற்சியைக் குழப்பியது சிங்களத் தரப்புதான்.குறிப்பாக நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனை 2018ஆம் ஆண்டு ஒரு யாப்புச்சதி முயற்சியின் மூலம் தோற்கடித்தார்.

மைத்திரிபால சிறிசேன அந்த யாப்பு உருவாக்க முயற்சிகளின்போது தெரிவித்த ஒரு கருத்தை இப்பொழுது சுமந்திரன், கஜேந்திரக்குமாருக்கு பதில் அளிப்பதற்காகப் பயன்படுத்துகின்றார். அது என்னவென்றால், தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளை பயன்படுத்துவது என்ற முடிவின் அடிப்படையில்தான் எக்கிய ராஜ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்று. ஆனால் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத சொற்களைக் கொண்ட யாப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய மைத்திரிபால சிறிசேனதான் அந்த யாப்பின் இடைக்கால வரைபை தோற்கடித்தார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் .

அதுமட்டுமல்ல, யாப்புருவாக்க முயற்சிகள் தேங்கி நின்றபின் 2021 ஆம் ஆண்டு ஐநாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை எழுதுவதற்காக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் கூடியபொழுது, அதில் கலந்து கொண்ட சுமந்திரன் சொன்னார், 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அங்கே அவர் குறிப்பிட்ட தோல்வியுற்ற பரிசோதனை எனப்படுவது நிலைமாறு கால நீதிதான். நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி அவர். யாப்புருவாக்க முயற்சியின் முன்னணித் தமிழ்ப் பங்காளியும் அவர். அப்படிப் பார்த்தால் ஓர் அடிப்படைக் கேள்வி இங்கே எழுகிறது. தோல்வியுற்ற பரிசோதனையின் விளைவாகக் கிடைத்த இடைக்கால வரைவு எப்படி வெற்றி பெற்ற ஒன்றாக இருக்க முடியும்?

நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் தோல்வியுற்றதற்கு அடிப்படைக் காரணம் மைத்திரியோ ரனிலோ அல்ல. அதைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. என்னவென்றால், நாட்டில் நிலை மாற்றம் ஏற்படாமலேயே நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முயன்றமைதான்.அதற்கு ஜநாவும் பொறுப்பு.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார்.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் ஈஸ்டர் குண்டுகள் வெடித்தன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக,நிலை மாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் எக்கிய ராஜ்ஜிய என்ற அந்த வார்த்தையையே பயன்படுத்த வேண்டி வந்தது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மயக்கம் தரும் விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? வெளிப்படைத் தன்மை மிக்க ஒரு சமஸ்ரியை ஏன் தமிழ் மக்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது? அதை நோக்கி ஏன் சிங்கள மக்களை, சிங்கள மக்களுடைய கூட்டு உளவியலைத் தயார்படுத்த முடியாமல் போனது? ஏனென்றால் அங்கே நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்பதால்தான்.

அதே இடைக்கல வரைவுதான் இப்பொழுது பேச்சுவார்த்தை மேசையில் வைக்கப்பட்டிருப்பதாக கஜேந்திரகுமார் குற்றம் சாட்டுகிறார்.அது ஒற்றை ஆட்சிப்  பண்புமிக்கது என்றும் அவர் கூறுகிறார்.இந்த விடயத்தில் சுமந்திரன் சமூக வலைத்தளங்களில் கஜேந்திரக்குமாருக்கு பதில் கூறிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதுதொடர்பான பகிரங்க விவாதம் ஒன்றுக்குப்  போக வேண்டும். தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியும் இந்த விடயத்தை மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அது வெளிப்படைத்  தன்மையுள்ள சமஸ்டி என்றால் ஏன் வெளிப்படையாக விவாதிக்க முடியாது? இல்லையென்றால் அதற்குள்  ஏதோ கள்ளம் இருக்கிறது என்றுதானே பொருள்?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு தீர்வு முயற்சியை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தேவையான அடிப்படைப்  பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்த் தரப்பு ஒன்றாக நின்று அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டு கஜேந்திரக்குமார் நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட உறுப்பினர்களை ஒன்றாகத் திரட்டும் ஒரு வேலையில் ஈடுபட்டார். ஆனால் அதற்குத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு தரவில்லை. அவர்கள் அதற்குத் தெரிவித்த அடிப்படைக் காரணம் என்னவென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியைக்  கையாண்டு கட்சியை உடைக்க முயற்சிக்கிறது,அதன்மூலம் கட்சியைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது என்பதுதான்.ஐநாவுக்குக் கடிதம் எழுதும் விடயத்திலும் அப்படிதான் தமிழரசுக்கட்சி கருதியது.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டுவரக்கூடிய பலத்தோடு காணப்படுவதாக  ஐநாவும் மேற்கு நாடுகளும் நம்புகின்றன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அரசாங்கம் ஐநாவிலும் உலகின் எல்லாத் தலை நகரங்களிலும் பெருமையாக கூறிக்கொள்கிறது. அதுபோலவே யாப்புருவாக்கத்துக்கான இடைக்கால வரைபிலும் தமிழ் மக்களின் ஆணை ஏற்கனவே பெறப்பட்டு விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் 2015ல் தொடங்கி 18 வரையிலுமான காலப்பகுதிக்குள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன என்றும் அரசாங்கம் கூறுகிறது.அதாவது இதை மேலும் கூர்மையாகச் சொன்னால், புதிய யாப்புக்கான இடைக்கால வரைவுக்கு ஏற்கனவே தமிழ் மக்களின் ஆணை உண்டு இது முதலாவது. இரண்டாவது, அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தத் தேவையான மக்கள் ஆணை இப்பொழுது தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலும் அவர்கள் இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தப் போகிறார்கள் என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார்.

ஆனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.எக்கிய ராஜ்ஜிய சுமந்திரனின் உழைப்புத்தான்.எனவே சுமந்திரன் அணி அதை எதிர்க்குமா?

அது மட்டுமல்ல கஜேந்திரகுமாருடன் ஒர் ஆவணத்தை எழுதி அதில் கையெழுத்திட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த விடயத்தில் வேறு விதமாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வைக்கக் கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மாறாக ஒரு புதிய யாப்பை உருவாக்கும் அமில பரிசோதனையில் அவர்கள் இப்போதைக்கு இறங்க மாட்டார்கள் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுவதாகத் தெரிகிறது. எனவே ஒரு மாகாண சபைத் தேர்தலை நோக்கி அவர்கள் உழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.அதன் ஒரு கட்டமாக 13ஆவது திருத்தம் தொடர்பான கருத்தரங்குகளை ஈபிஆர்எல்எஃப் தொடர்ச்சியாக ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இக்கருத்தரங்குகளின் பின்னணியில் வரதராஜப்  பெருமாள் இருக்கிறார் என்ற ஊகம் ஒன்று இருந்தது.அண்மை நாட்களில் வரதராஜப்பெருமாள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பகிரங்கமாக, வெளிப்படையாகக்  காணப்படுகிறார். எனவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியா மேற்படி கருத்தரங்குகள்?என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது.அண்மையில் ஐநா கூட்டத் தொடரில் இந்தியா 13ஆ வது திருத்தத்தைக் குறித்தும் மாகாண சபைத் தேர்தல்களைக் குறித்தும் குறிப்பிட்டிருந்தது. ஐ நா தீர்மானத்திலும் அவை உண்டு.

இப்படிப்பட்டதோர் பின்னணியில் மாகாண சபைத் தேர்தல்  முதலில் வருமா? அல்லது யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் வருமா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

மாகாண சபைத் தேர்தல்கள் முதலில் நடக்குமாக இருந்தால், இப்போது இருக்கும் தமிழ்த் தேசியப்  பேரவை என்ற கூட்டு பெரும்பாலும் உடைந்து விடும். சுமந்திரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை எப்படித் தனிமைப்படுத்துவது என்று சிந்தித்து புதிய கூட்டுக்களை உருவாக்கும்.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வீட்டின் பக்கம் போனாலா அல்லது சைக்கிளின் பக்கம் போனாலா தமக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றுதான் சிந்திக்கும்.தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டைப்  பயன்படுத்தி தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வழங்கிய ஆணையை எப்படிப் புதுப்பிப்பது என்று என்பிபி சிந்திக்கும். அவ்வாறு அவர்கள் தமிழ் மக்களின் ஆணையைப்  புதுப்பித்துக் கொள்வார்களாக இருந்தால் யாப்புருவாக்க முயற்சிகளில் அரசாங்கத்தின் கை ஓங்கும். கஜேந்திரக்குமார் எச்சரிப்பது போல நடக்கும்.

மாறாக,யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் தொடங்கப்பட்டால், அங்கேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் அதுவும் அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  எதிர்ப்பை அரசாங்கம் பொருட்படுத்துமா இல்லையா என்பது தமிழ்மக்கள்  அப்புதிய யாப்பருவாக்க முயற்சிகளுக்குக் காட்டப்போகும் எதிர்ப்பில்தான் தங்கியிருக்கும்.

நன்றி

Leave a Reply