செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களும் எதிர்கொள்ளப்படும் முக்கிய சவால்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கான 16 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட காலப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கண்டுபிடிப்புகள், 90% க்கும் மேற்பட்ட உடல்கள் சாத்தியமான நீதிக்கு புறம்பான கொலைகளின் மூலம் இடம்பெற்றிருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.

அதேவேளை, தடயவியல், மானுடவியல் மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் பற்றாக்குறை, மேம்பட்ட கார்பன்-டேட்டிங் தொழில்நுட்பத்துக்கான குறைந்த அணுகல், மரபணு பரிசோதனையில் உள்ள சவால்கள் போன்ற நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகள் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிதியுதவியில் ஏற்படும் தாமதங்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடகச் சுதந்திரம் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மனித புதைகுழி விசாரணைகளுக்கான நிலையான நடைமுறையை உருவாக்குதல், மேம்பட்ட தடயவியல் வசதிகள் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பயன்படுத்துதல், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் மரபணு வங்கியை அமைத்தல், மேலும் கடுமையான குற்றச்செயல்களை விசாரித்து வழக்குத் தொடர அரசு அதிகாரிகளின் மீது அதிகாரம் கொண்ட சுயாதீன அலுவலகத்தை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சாட்சிகள் அல்லது ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்துவதை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்பதையும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

விசாரணையை திறம்பட நிறைவு செய்யவும், புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படுவதின் அவசரத் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply