ஈரான் கடற்படைக்கு உட்பட்ட IRIS Bushier என்ற கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் அந்த கப்பலில் இருந்த 208 பணியாளர் உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சமூக ஊடக தளமான Xஇல் வெளியிட்ட செய்தியில், தற்போதைய பிராந்திய பதற்ற நிலைமைகளின் மத்தியில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை பேணிக் கொள்ளும் முக்கியத்துவத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேவையான நேரங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதுடன், சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள தனது பொறுப்புகளை பாதுகாப்பது இலங்கைக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வளைகுடா பிராந்தியத்திலும் உலகளாவிய அளவிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய மோதலில் ஈடுபட்ட அனைத்து தரப்புகளுக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்க இலங்கை அரசு தொடர்ந்து செயல்படும் எனும் நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
அத்துடன், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பையும் பாதுகாப்புத் தன்மையையும் உறுதி செய்வதற்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய கூட்டாளிகளுடன் அரசு நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

