ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

நாட்டில் இடம்பெற்ற  குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது.

ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்.

அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே.

வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள்.

வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர்.

நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள்.

ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம்”இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply