தூத்துக்குடி: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர், முன்னாள் எம்.பி உள்பட 9 பேர் ஆஜரானார்கள்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து திருவிடைமருதூரில், 2018-ம் ஆண்டு மே 24-ம் தேதி, முன்னாள் எம்பி செ.ராமலிங்கம் தலைமையில், அப்போதைய எம்எல்ஏவும், தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சருமான கோவி. செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருவிடைமருதூர் போலீஸார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக், செ.ராமலிங்கம், கோவி.செழியன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,ஜெயபால்,கோசி.இளங்கோவன், பஞ்சநாதன் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இதைதொடர்ந்து, எம்பி, எம்எல்ஏக்களுக்கான தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜாரானார்கள். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கை வரும் நவ,25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
