தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

கிராம மக்கள் தீ வைத்து விரட்ட முயன்றபோது ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிகிந்தலை, சீப்புக்குளம் பகுதியில் உள்ள அபகஹ வெல சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டின் முன் முற்றத்தில் திங்கட்கிழமை காலை தீக்காயங்களால் படுகாயமடைந்த நிலையில் அம்பா போ (Amba Bo) என்று அழைக்கப்படும் 40 வயது காட்டு யானை கண்டுபிடிக்கப்பட்டது.

அனுராதபுரம் பந்துலகம பிரிவைச் சேர்ந்த வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க விரைந்தனர், ஆனால் பின்னர் அது உயிரிழந்தது.

டிசம்பர் 14 ஆம் திகதி கிராமத்துக்குள் புகுந்த யானையை கிராமவாசிகள் எரியும் தீப்பந்தங்களைப் பயன்படுத்தி யானையை விரட்ட முயன்றபோது இந்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக மிகிந்தலை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒரு குடியிருப்பாளர் யானையின் உடலில் நேரடியாக தீ வைத்ததாகக் கூறப்படுகிறது – இதனால் யானை படுகாயங்களுக்கு உள்ளானது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, குறித்த யானை சுமார் மூன்று மாதங்களாக உடல்நலக் குறைவினால் இருந்ததாகவும், அந்தக் காலகட்டத்தில் கால்நடை சிகிச்சை பெற்றதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். 

காட்டு யானைகளைத் துன்புறுத்துவது இலங்கையின் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். 

தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட இனமான யானைகளை காயம்/ சித்திரவதை அல்லது கொல்லப்படுவதையோ சட்டம் தடை செய்கிறது.

ஆனால் இத்தகைய சட்டப் பாதுகாப்பு இருந்தபோதிலும், மனித யானை மோதலின் விளைவாக இலங்கையில் யானை இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

2025 ஆம் ஆண்டில் மட்டும், இந்த மோதலால் 300 க்கும் மேற்பட்ட யானைகள் முக்கியமாக காயங்களுக்கு ஆளாகியுள்ளன. 

வனவிலங்கு அதிகாரிகளுக்கான நிதி மற்றும் வளங்களின் பற்றாக்குறை, யானை வேலிகள் போன்ற கிராமப்புற அளவிலான திட்டங்களை கண்காணிப்பதில் முறைகேடுகள் மற்றும் பிற சவால்கள் என்பன யானை – மனித மோதலில் அதிகளவில் செல்வாக்கு செலுத்துகின்றன.

நன்றி

Leave a Reply