தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்!

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது.

அதன்படி, தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பின்னர் தெருநாய்களை அதே இடங்களுக்கு மீண்டும் விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் நகராட்சி பிரதேசங்களுக்கும் பொருந்தும் வகையில், இந்தியா முழுவதும் இந்த விடயத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவு ரேபிஸ் (விசர்) நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குப் பொருந்தாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாய்களுக்கு பொதுவில் உணவளிக்க அனுமதிக்கப்படாது என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடத்தை உருவாக்க நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் உள்ள வீதிகள் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு கடந்த ஆகஸ்ட் 11 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

ஆகஸ்ட் 11 அன்று உயர் நீதிமன்றம், தெருநாய்களை கருத்தடை செய்த பின்னர் அவற்றின் வாழ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரக்கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டது.

எனினும், இந்த உத்தரவுக்கு எதிரான சீற்றத்திற்கு மத்தியில், ஆகஸ்ட் 14 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவை ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

நன்றி

Leave a Reply