தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு











தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு – Athavan News

































மலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக செய்து காட்டியுள்ளதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை கொமர்சல் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக இழுபறியில் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்காக உயர் நீதிமன்றம் தொழில் அமைச்சு ஊடாக கம்பனிகளுடன் பேசி, நியாயமான சம்பளத்தை வரும் நவம்பர் 30ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

“இது தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இவ்வாறான வழக்கைத் தொடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கான நீதி பெற்றுத் தந்ததற்காக மலையக மக்கள் சக்தியின் சார்பில் செங்கொடி சங்கத்திற்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார். 

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி போன்ற பலமிக்க தொழிற்சங்கங்கள் இருந்தும், சம்பளப் பிரச்சினைக்கு அவர்கள் நீதிமன்றம் செல்லாமல் ஊடகங்கள் மற்றும் அமைச்சர்மட்ட பேச்சுவார்த்தைகளில் மட்டுமே ஈடுபட்டதாக அவர் விமர்சித்தார். அரசியல் நோக்கங்களுக்காக அவர்கள் வழக்குத் தாக்கல் செய்யத் தயங்கினார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பெருந்தோட்டங்களில் சுமார் 1,20,000 தொழிலாளர்களே நிரந்தரத் தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிறிய தோட்டங்களில் குறைந்த வருமானத்திற்காக கடின உழைப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அவர்கள் அடிமைத்தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தொழிற்சங்கங்கள் சம்பளப் பிரச்சினையை மட்டும் அல்லாமல், தொழிலாளர்களின் காணி உரிமை மற்றும் நில உரிமையை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நன்றி

Leave a Reply