
மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.
அமெரிக்காவின் ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திங்கட்கிழமை பல்வேறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
நேற்று பல செய்தி நிறுவனங்களுக்கு வழங்கிய பேட்டிகள், குடியரசுக் கட்சி மாநாட்டில் நிகழ்த்திய உரை மற்றும் செய்தியாளர் சந்திப்பில் அவர் ஈரான் குறித்து பல கருத்துகளை வெளியிட்டார்.
CBS News-க்கு வழங்கிய பேட்டியில், “இந்தப் போர் பெரும்பாலும் முடிவடைந்ததாகவே நான் நினைக்கிறேன். நாங்கள் திட்டமிட்டதை விட மிகவும் முன்னிலையில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
மேலும் NBC-க்கு வழங்கிய கருத்தில், ஈரானின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கைப்பற்றும் வாய்ப்பை முற்றிலும் மறுக்கவில்லை. “அது குறித்து பலரும் பேசுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் New York Post-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்க படைகளை நேரடியாக இரானுக்குள் அனுப்புவது குறித்து இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், அதற்கு இன்னும் நேரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியபோது, ஈரானில் “மிகவும் தீயவர்களை அகற்றுவதற்காக” குறுகிய கால இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டதாக அவர் கூறினார்.
“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.
செய்தியாளர் சந்திப்பில், ஈரானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை “மிகப் பெரிய வெற்றி” எனவும், ஆனால் ஈரான் நீண்ட காலத்திற்கு அணு ஆயுதங்களை உருவாக்க முடியாதபடி உறுதி செய்வது மிகப் பெரிய பணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அமெரிக்காவிற்கு இன்னும் ஈரானில் தாக்குதல் நடத்தக்கூடிய இலக்குகள் உள்ளன என்றும், அவற்றை “ஒரே நாளில் அழிக்க முடியும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தப் போர் மிக விரைவில் முடிவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். (News21)
