முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவு பின்வருமாறு,
“ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமை நீக்க சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து நான் நேற்றைய தினம் (11) வெளியேறினேன்.
விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற ஊடகங்களில் சிலர் இதற்கு முன்னர் வௌியிட்ட பல்வேறு கருத்துக்களை நான் அவதானித்தேன்.
மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது மிகக் குறுகிய காலத்தில் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி சம்பாதித்து வரும் குழு தங்கள் திறமையின்மையை மறைக்க ஊடகங்களில் வெளியிட்ட அந்த கருத்துகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.
இருப்பினும், பின்னர், அவர்களால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்திற்கு விடைகொடுத்தேன்.
ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற நான், சட்டத்தின் முன்பும், என் மக்கள் முன்பும் மட்டும் தான் தலை வணங்குவேன்.
தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட ஒழுக்கமற்ற, தொழில்முறையற்ற அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால், அது தொடர்பாக எழுந்த நிகழ்வுகளின் இலக்காக நான் மாறிவிட்டேன்.
ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போராடினேன்.
சுவாசம் நம் அனைவருக்கும் பொதுவானது. இனம் அல்லது மத வேறுபாடு இல்லை. எமது சுவாசத்திற்காக தங்களின் மூச்சை இழந்தவர்கள் இராணுவ வீரர்களே.
அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் அனைவரும் புனித நகரமான அனுராதபுரத்தில் சந்த ஹிரு சேயவை உருவாக்கினோம்.
சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை, எங்கள் தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை இது குறிக்கிறது.
எனது மூத்த மகன் நாமல் கூறியது போல நான் எல்லாம் தொடங்கிய எனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். நாங்களே கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வந்தேன்.
இப்போது கிராமத்தில் புளிப்பு மீன் குழம்பை அனுபவிக்க முடியும். அதை கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இது அனைத்தும் இந்த பூமியிலிருந்து தொடங்கியது.
மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருவாவிலிருந்து போட்டியிட்டார்.
எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. ஒரு இளம் எம்.பி.யாக நான் பின்பற்ற வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார்.
அவர் எங்களுக்கு ஒரு தலைவராகவும் தாயாகவும் இருந்தார் என்று சொல்வது உண்மைதான். அரசியலில் சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம்.
ருஹுணு எம்.பி.யாக இருந்த எனது மறைந்த அன்புக்குரிய தந்தை, நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்காவின் பின்னால் எப்போதும் இருந்தார்.
ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளை என் தந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இளைய எம்.பி.யாக 1970 இல் மக்கள் அரசாங்கத்தின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை உரையை நான் நிகழ்த்தினேன்.
ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.
இருண்ட காலங்களில் இருந்த அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்களைத் தாண்டி, காணாமல் போனவர்களின் சார்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றவர் இந்த மஹிந்த ராஜபக்ஷதான்.
காணாமல் போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னிலையாகி சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரியான “சட்டத்தரணி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் – மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்காலை”. என்பதை எனது நண்பர்களுக்கு நான் மீண்டும் நினைப்படுத்த விரும்புகிறேன்.
பாதயாத்திரைகள், பொதுமக்கள் கூக்குரல், மனித சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
யாரும் தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பதட்டங்களை சமாளிக்க ஜனநாயகத்திலிருந்து விலக முடியாது.
தவறான தகவல்களை பிரச்சாரம் செய்து பிரதான எதிர்க்கட்சி சித்தாந்தவாதிகளை அடக்குவதற்கான முயற்சி வருந்தத்தக்கது.
மக்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தினால்தான் கடந்த காலங்களில் சில சம்பவங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ தனது இதயத்திற்கு ஏற்பவும் நாட்டிற்காகவும் முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது எதுவுமில்லை.
கடந்த காலத்திலும் இன்றும் நான் பெற்ற அதே மக்களின் அன்பைப் பெறுவது எனது பாக்கியம். அந்த வரப்பிரசாதத்தை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது.
எங்கள் மரியாதைக்குரிய மதத்தலைவர்களிடம் இருந்து நான் எப்போதும் பெற்ற ஆசீர்வாதங்கள் பொருள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவை.
என் அன்பு மனைவி ஷிராந்தி அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை எனக்கு வழங்குவதன் மூலம் எப்போதும் எனக்கு பலத்தை அளித்து வருகிறார்.
அன்றும் இன்றும் என் பக்கத்தில் இருந்த, இருக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து நான் பெறும் பாதுகாப்பு, வேலைக்கு அப்பாற்பட்ட மிகவும் அன்பான பிணைப்பாகும்.
நான் தங்காலையில் இருந்தாலும் விஜேராமவில் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான்.
நான் உயிருடன் இருக்கும் வரை, நாம் அனைவரும் வாழும் சிங்கக் கொடியின் நிழலில் இருக்கும் இந்த ஒன்றுபட்ட தாய்நாட்டை யாராவது காட்டிக் கொடுத்தால், எவ்வளவு துன்புறுத்தல்கள் வந்தாலும் நான் எழுந்து நிற்பேன் என்று அறிவிக்கிறேன்.
அந்த நாள் வந்தால், ஆதரிப்பதற்கு மகா சங்கத்தினருடன் இந்த நாட்டின் அன்பான மக்கள் இருப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
கிருவாப்பத்துவைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் கர்ச்சிப்பினை நன்கு அறிந்தவர்.” என பதிவிட்டுள்ளார்.