நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி பெற்றல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பொது வணிகங்கள் தொடர்பான குழுவின் (COPE) கோரிக்கைக்கு இணங்க கணக்காய்வாளர் நாயகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையின்படி, டெண்டர் அழைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் பதிவு செயல்முறையை முழுமையாக நிறைவு செய்த வழங்குநர்களிடமிருந்து மட்டுமே முன்விலைகள் பெறப்படும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்த நாளில் முழு பதிவு கட்டணம் செலுத்தாமல் பதிவு உறுதிப்படுத்தாத மூன்று வழங்குநர்களுக்கும் முன்விலைகள் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட Trident நிறுவனமும் அந்நாளில் பதிவு உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருந்ததாகக் கணக்காய்வு கண்டறிந்துள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் சோதனை செய்யப்படும் போது, ஏற்றுமதி துறைமுகத்திலும் இறக்குமதி துறைமுகத்திலும் சுயாதீன ஆய்வாளர் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால், ஏற்றுமதி துறைமுகத்தில் Mitra SK South Africa நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ப மாதிரி பரிசோதனை செய்ய ஒப்புதல் பெற்ற சான்றிதழ் இல்லாததால், 2025 டிசம்பர் 29ஆம் தேதியுடன் அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்த PT Mitra SK Analisa Testama Samarinda என்ற இந்தோனேஷிய நிறுவனத்திடம் சோதனை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிறுவனத்தின் அனுமதி 2026 மார்ச் 31ஆம் தேதிவரை புதுப்பிக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் கணக்காய்வு தெரிவிக்கிறது. இதற்கிடையில், கிடைத்த 12 கப்பல் சரக்குகளுக்கான ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாததாக அடையாளம் காணப்பட்ட Mitra SK South Africa நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுவதாவது, ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள் மற்றும் லக்விஜய மின்நிலைய கட்டுப்பாட்டு அமைப்பின் தரவுகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவற்றை சரிபார்க்க மாற்று வழிகளை பயன்படுத்த Lanka Coal Company நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், 2025 நவம்பர் 13 முதல் டிசம்பர் 30 வரை (நாட்கள் 40) நிலக்கரி இறக்குமதி செய்ய ஏற்ற காலப்பகுதியில் எந்த கப்பலும் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 2026 மார்ச் 18 அன்று அவசர கொள்முதல் மூலம் நிலக்கரி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட Taranjot Resource (Pvt) Ltd நிறுவனம், கடந்த 36 மாதங்களில் லக்விஜய மின்நிலையத்திற்கு தேவையான குறைந்தபட்ச வெப்ப திறன் (5900 கிலோகலோரி அல்லது அதற்கு மேல்) கொண்ட நிலக்கரி வழங்கத் தவறிய நிறுவனம் எனவும் கணக்காய்வு வெளிப்படுத்துகிறது.
இந்த நிலைமைகளை கருத்தில் கொள்ளும்போது, தேவையான நேரத்தில் நிலக்கரி கப்பல்களை கொண்டு வர இயலாமை மற்றும் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் உருவானால், லக்விஜய மின்நிலையத்தின் செயல்பாடுகளுக்கும், தொடர்ச்சியான மின்சாரம் வழங்குதலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
