நாகப்பட்டினம்: நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி, சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற் கொள்ளப்பட்டது.
நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், வடகிழக்கு பருவமழை பெய்து பல இடங்களில் வயலில் தேங்கிய மழைநீரில் சாய்ந்து மூழ்கியதால் பெருமளவில் நெல்மணிகள் முளைவிட்டும், பயிர்கள் அழுகியும் பாதிக்கப்பட்டது.
மழைக்கு முன்னதாக 80 சதவீதம் அறுவடைப் பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில் எஞ்சிய பரப்பளவு நெற்பயிர்கள் அறுவடை பணிகள் மழை காரணமாக 10 நாட்களுக்கு மேலாக முடங்கியது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததாலும், புயல்- மழை முன்னெச்சரிக்கை காரணமாகவும் குறுவை அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுந்தரபாண்டியம், நெய்விளக்கு, வடபாதி, கீரங்குடி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் இரவு- பகலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே புகையான் நோய் தாக்கி நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மழையால் முளைத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மகசூல் பெரிய அளவில் குறைந்துள்ளதாக டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டு ஏக்கருக்கு குறைந்தது 30 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்த நிலையில் தற்போது 10- 15 மூட்டைகள் வரை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகசூல் பாதியாக குறைந்துள்ளதால் ஏக்கருக்கு ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்படும் என்று கவலை தெரிவித்த விவசாயிகள், நெல் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து விரைந்து கணக் கெடுத்து உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
