நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு – போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன? | Nepal President Ramchandra Paudel accepts KP Sharma Oli’s resignation

காத்மாண்டு: இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினமா செய்வதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடல் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்பதாக அதிபர் ராமச்சந்திர பவுடல் அறிவித்தார்.

நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினமா செய்தது குறித்து கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், “அவர் ராஜினமா செய்தது நாட்டுக்கு நல்லது. தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவருமே ஊழல்வாதிகள். மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள். இவர்களால் நாட்டுக்கு வளர்ச்சி கிடைக்காது. நாட்டுக்கு மாற்றம் தேவை. இனி, இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள். சமூக ஊடக தடைக்காக மட்டும் நாங்கள் போராடவில்லை. இளைஞர்களின் தலைமை நாட்டுக்கு வேண்டும் என்பதற்காகவுமே நாங்கள் போராடினோம். எங்கள் கோரிக்கை, ஓர் இளைஞர் நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதே” என தெரிவித்தனர்.

முன்னதாக, சமூக வலை​தளங்​கள் மீதான தடையை விலக்க கோரி​யும், நாட்​டில் பரவி​யுள்ள ஊழல் கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்கக் கோரி​யும் நேற்று ஆயிரக்​கணக்​கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்​மாண்​டு​வில் பேரணி நடத்​தினர். அப்​போது, நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே போடப்​பட்​டிருந்த தடுப்​பு​களை தாண்டி உள்ளே நுழைய போ​ராட்​டக்​காரர்​கள் முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீதும் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர்.

இதையடுத்​து,போ​ராட்​டக்​காரர்​களுக்​கும் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே மோதல் மூண்​டது. பாதுகாப்பு படை​யினர் கண்​ணீர் புகை குண்​டு​களை வீசி​யும், ரப்​பர் தோட்​டாக்​களால் சுட்​டும், தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் போ​ராட்​டக்​காரர்​களை கலைக்க முயன்​றனர். இந்த கடும் மோதலில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 500-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்தனர்.

தலைநகரைத் தாண்டி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால், நிலைமையைப் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எனினும், ஊரடங்கு உத்தரவுகளை மீறி இளைஞர்கள் போராட்டங்களில் பெருமளவில் பங்கேற்றதை அடுத்து, சமூக ஊடகங்கள் மீதான தடையை நேபாள அரசு திரும்பப் பெறுவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா அறிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்பு, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. நேபாள நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஏராளான இளைஞர்கள், நாடாளுமன்ற கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர். இதனால், நாடாளுமன்ற கட்டிடம் சேதமடைந்தது.

மேலும், பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பக்தாபூர் இல்லத்துக்கும் இளைஞர்கள் தீ வைத்தனர். இதில், அந்தக் கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அதன் முன்பாக இளைஞர்கள் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காத்மாண்டு தெருக்களில் குழுமிய இளைஞர்கள், தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு ஊழலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நேபாள காங்கிரஸ் தலைமை அலுவலகம், அமைச்சர்களின் வீடுகள், காவல்துறை அலுவலகங்கள் என பலவற்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

முன்னதாக, சர்மா ஒலி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து நேபாள காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. நேபாள காங்கிரஸ் தலைவரான வேளாண் அமைச்சர் ராம் நாத் அதிகாரி, பிரதமர் கே.பி.ஒலி தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அரசாங்கம் போராட்டங்களைக் கையாண்டதற்கு தார்மிகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply