உலகப் புகழ்பெற்ற விளையாட்டு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான நைக்கி (Nike), எதிர்வரும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடருக்காகத் தான் தயாரித்துள்ள சீருடைகளில் (Kits) ஏற்பட்டுள்ள வடிவமைப்பு குறைபாடு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 11-ஆம் திகதி அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து தொடருக்காக இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் சீருடைகளை நைக்கி நிறுவனம் தயாரித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளின் போது, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வீரர்கள் அணிந்திருந்த சீருடைகளின் தோள்பட்டைத் தையல் பகுதிகளில் (Shoulder seams) ஒருவித வீக்க தன்மை (Bulging) காணப்பட்டது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நைக்கி நிறுவனப் பேச்சாளர், “தேசிய அணிகளுக்கான எமது சீருடைகளில் தோள்பட்டைத் தையல் பகுதியில் ஒரு சிறிய குறைபாடு இருப்பதை அவதானித்துள்ளோம் எனவும் இது வீரர்களின் ஆட்டத் திறனைப் பாதிக்காது என்றாலும், அதன் தோற்றம் (Aesthetic) நாம் எதிர்பார்த்த தரத்தில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தங்களது தயாரிப்புத் தரத்தில் ஏற்பட்ட இந்தச் சரிவைச் சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீரர்கள் அணியும் ‘Match’ சட்டைகள் மட்டுமன்றி, ரசிகர்கள் வாங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட ‘Stadium’ சட்டைகளிலும் இதே குறைபாடு காணப்படுகின்றது.
அதிக விலை கொடுத்து வாங்கிய சட்டைகளில் இவ்வாறான குறைபாடுகள் இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் கடும் வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில் ‘Performance Cooling’ தொழில்நுட்பத்துடன் இந்தச் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஜூன் 17-ஆம் திகதி குரோஷியாவை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய நைக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
