2022ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டக் காலத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமை, அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய தாக்கல் செய்த மனுவை விசாரித்தபின், நீதியரசர்கள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன் நீதியரசர் சோபித ராஜகருணா இந்த தீர்ப்பை வழங்கினார்.
2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்குப் பின்னர், வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிமன்றம், வசந்த முதலிகேவை அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான நியாயமான சந்தேகத்தை நிரூபிக்கும் ஆதாரங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், பேலியகொடை விசேட விசாரணைப் பிரிவின் பிரதான காவல்துறை பரிசோதகர் டபிள்யூ.ஜி.ஏ.கே. கமகே இதற்கு பொறுப்பானவர் எனவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான முன்னாள் பிரதிகாவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காவிந்த பியசேகர உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
#VasanthaMudalige #SupremeCourtSL #HumanRightsViolation #PTA_Abuse #Aragalaya2022
