(எம்.ஆர்.எம்.வசீம்)
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் யுத்தத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு தயங்கக்கூடாது. என்றாலும் அரசாங்கம் பூசி நலுவும் நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மத்தியகிழக்கு போரினால் நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் தற்போது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வாதிகாரமுறையிலே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த எந்த காரணமும் இவர்களுக்கு இல்லை. அவர்களது ஆட்சி பிடிக்கவில்லை என்பதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி, அவர்களது ஆன்மிக தலைவரை கொலை செய்திருக்கிறது.இந்த இரண்டு நாடுகளும் அத்துமீறியே செயற்பட்டு வருகின்றன.
ஈரான் மீது அமெரி்க்கா, இஸ்ரேல் ஆரம்பித்த இந்த யுத்தம் 3,4 நாட்களில் முடிவடையும் என்றே நினைத்தார்கள். ஆனால் ஒரு மாதம்வரை செல்லும் என்றே நினைக்கிறேன். இந்த யுத்தத்தில் அனைத்து தரப்பினரும் ஈரானுடனே இருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களுக்கு சென்றுபார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எமது அரசாங்கம் அந்த நிலைப்பாட்டில் இல்லை.ஈரானுக்கு ஆதரவளித்தால், அமெரிக்க மக்களுக்கு நொந்துவிடும் என அரசாங்கம் அச்சப்படுகிறது.
அதேநேரம் ஈரான் கப்பல் சர்வதேச கடல் எல்லையில் நின்று இலங்கையின் கடல் எல்லைக்குள் வருவதற்கு அனுமதி கேட்டு 11 மணி நேரம் வரை அதற்கு அனுமதி வழங்காமல் இருந்துள்ளது. குறித்த கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகிய பின்னரே எமது கடற்படையினர் அங்கு சென்றனர். சர்வதேச கடல் எல்லைக்குள் பாதிக்கப்படும் கப்பலுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கம் ஒன்றின் கடமையாகும். ஏனெனில் அது தொடர்பில் நாங்கள் சர்வதேச சமவாயத்தில் கைச்சாத்திட்டிருக்கிறோம். என்றாலும் அந்த கப்பலில் இருந்த சிலரின் உயிர்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் தெளிவில்லாமல் இருக்கிறது. அதனாலே நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் மலேசியா, இந்துனேசிய தூதுவர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர். வெளிநாட்டு தூதுவர்கள் வேறுயாரும் கலந்துகொண்டிருக்கவில்லை. அந்த இப்தார் நிகழ்வுக்கு எம்மை அழைத்தைமைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடே இதற்கு காரணமாகும்.
மேலும் ஈரான் தற்போது ஹர்மூஸ் நீரிணையை மூடியுள்ளதால், எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஹர்மூஸை மூடிவிடுவதால் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் எரிபொருள் கொண்டுவருவது இந்தியாவில் இருந்தாகும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தியாவுக்கு எரிபொருள் எந்த வழியால் வரவேண்டும் என அவர் புரியாமல் இருக்கிறார். ஹர்மூஸ் மூடப்பட்டுள்ளதால், தற்போது ஓரளவு எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஹூதி படைகள் செங்கடலில் தாக்குதலை ஆரம்பித்தால் இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கும்.
அதனால் அரசாங்கம் என்றவகையில் நாங்கள் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு தயங்கக்கூடாது. பலஸ்தீன் மக்கள் தாக்கப்படும்போது அரசாங்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. இது ஈரானை திருப்திப்படுத்தவோ பலஸ்தீன் மக்களை திருப்திப்படுத்தவோ மேற்கொள்ளவில்லை. அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் நடு நிலையை கடைப்பிடிக்கவில்லை. ஆனால் தற்போது பூசி நலுவும் நிலைப்பாட்டையே அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது என்றார்.

