கும்பலாக குஷியாக ஒருவரை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறார்களே..
அவர் ஏதாவது சட்டமன்ற அல்லது நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டாரோ…!.. என்று எண்ணி விடாதீர்கள்.
கோவையில் நடைபெற்ற ஒரு பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வில் வெற்றி பெற்று விட்டாராம்.
நாமக்கல்லில் ஒரு மஹல்லாவில் பள்ளிவாசலில் நிர்வாகத்தை பிடிக்க இரு தரப்பிடையே அடிதடியே நடந்துள்ளது.
ஒரு ஊரில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் தேர்வு பெற்றவர்களுக்கு அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்திய புகைப்படங்கள் வெளியிட்டு குஷியாகிய சம்பவங்கள் உண்டு .
சில இடங்களில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் தேர்வு செய்யப்பட லஞ்சம் கொடுத்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகப்பதவி என்பது பெருமை சேர்க்கும் பதவியோ பெருமையடிக்க வேண்டிய பதவியோ அல்ல..!
அது ஒரு அமானிதமான பதவி..!
அந்த பதவியில் உள்ளவர்கள் தங்களால் பள்ளிவாசலின் சொத்துக்களுக்கு எவ்விதமான குறைகளோ நஷ்டமோ ஏற்படுத்தி விடாமல் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பதவி..!
எனவே தான் உலகின் முதன்மை ஆலயமான புனித கஃபதுல்லாஹ்வை உள்ளடக்கிய மஸ்ஜிதுல் ஹாரம் மற்றும் மஸ்ஜிதுன்னபவியை நிர்வாகம் செய்யும் சவூதி மன்னர்கள் தங்களை “காதிமுல் ஹரமைன்” (பள்ளிவாசல் சேவகர்கள்) என்று தான் அழைக்க விரும்புகிறார்கள்.
அல்லாஹ்வும் தனது இல்லமான பள்ளிவாசலை பரிபாலனம் செய்பவர்களிடம் நான்கு அம்சங்களை எதிர்பார்க்கிறான்.
1, அல்லாஹ்வையும் மறுமை நாள் குறித்தும் பரிபூரண நம்பிக்கை வேண்டும் .
2, ஐவேளை தொழுகையை பேணுதலாக இருக்க வேண்டும்.
3, ஜகாத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
4, அல்லாஹ்வை குறித்த அச்சம் நிறைவாக இருக்க வேண்டும்.
(திருக்குர்ஆன் 9:18)
உங்களின் மஹல்லாவில் பள்ளிவாசலை பரிபாலனம் செய்பவர்களிடம் இந்த அம்சங்கள் உள்ளனவா?! என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
(முஜிபுர் ரஹ்மான் சிராஜி)