பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும்.
இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கொந்தளிப்பு தொடர்ந்தது, தத்யாலில் போராட்டக்காரர்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஆயிரக்கணக்கான மேலதிக வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.
முசாபராபாத்தில் ஐந்து போராட்டக்காரர்களும், தீர்கோட்டில் ஐந்து பேரும், தத்யாலில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையில் குறைந்தது மூன்று பொலிஸ் அதிகாரிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைதியின்மை ஒரு பகுதியில் மட்டும் நிற்கவில்லை.
முசாபராபாத்துடன், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி ஆகிய இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் மற்றும் மோதல்கள் பதிவாகியுள்ளன,
இது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது.
ஊடக அறிக்கைகளின்படி, 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக குற்றம் சாட்டி, கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (JAAC) இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
பிராந்தியம் முழுவதும் சந்தைகள், கடைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டுள்ளன.