நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தொழிலாளர் வருங்கால் வைப்பு நிதி எனப்படும் இந்த இபிஎஃப்ஓ விதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு (CBT), அண்மையில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. EPFO 3.0 எனப்படும் இந்தப் புதிய விதிகள்தான் பல்வேறு விமர்சனங்களை ஈர்த்துள்ளது
காரணம், பணியில் இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் பணத்தில் இருந்து 75% மேல் எடுக்க இயலாது, குறைந்தபட்ச வைப்புத் தொகை (minimum balance) 25% அவர்கள் பிஎஃப் கணக்கில் அவர்களது ஓய்வுக் காலம் வரை இருக்க வேண்டும். அதேபோல், பணி இழந்தவர்கள் அவர்கள் பிஎஃப் பணத்தை எடுக்க முன்னதாக இருந்த இரண்டு மாதங்களுக்குப் பதில் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
இதனால், பணி இழந்தவர்களுக்கு பெரிய பலமாக இருக்கக் கூடிய பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்க முடியாத வகையில் விதிகளை வகுத்திருப்பது தொழிலாளர்களில் பணத்தை அரசாங்கம் திருடுவதற்குச் சமம் என்ற விமரசனம் எழுந்துள்ளது.
ஆனால், EPFO தரப்போ, பணியில் இருக்கும் ஊழியர்கள் அவர்களின் ஓய்வு வயது வரை 25% மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவது பணியாளர்கள் அவ்வப்போது பகுதியாக பிஎஃப் தொகையை எடுப்பதால், அவர்கள் ஓய்வுக் காலத்தில் பணி பாதுகாப்பு என்ற EPFO-வின் இலக்கு நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யும் எனக் கூறுகிறது.
மேலும், பணியை இழந்தவர்கள் முழு PF பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலத்தை 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதும், அவர்களின் முடிவை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே ஆகும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி பணி இழந்தவர்கள் அவர்களின் பிஎஃப் தொகையில் இருந்து 75 சதவீதத்தை 12 மாதங்களில் எடுத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள 25 சதவீத தொகையை எடுக்க ஓய்வு வயதை எட்டும் வரை காத்திருக்க வேண்டும்.
ஒருவேளை அந்த 12 மாத காலகட்டத்தில் அவர்களுக்கு வேறு வேலை கிடைத்தால், அந்த 25% பணத்தை அவர்கள் எடுக்க வேண்டிய தேவை இருக்காது.அந்த 25% வைப்புத் தொகைக்கு தொழிலாளர்கள் 8.25% விகிதத்தில் கூட்டு வட்டியை அனுபவிக்க அனுமதிப்பதே இதன் நோக்கம் என இபிஎஃப்ஓ கூறுகிறது.
அதேவேளையில், பணம் எடுப்பதற்கான குறைந்தபட்ச பணிச் சேவை வரம்பு 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பும் தொழிலாளி அந்தக் குறிப்பிட்ட வேலையில் ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே பணத்தை எடுக்கலாம்.
பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு 13 வெவ்வேறு விதிகள் உள்ளன, அவை மூன்று பிரிவுகளின் கீழ் அடங்கும். அவை மருத்துவ தேவை, கல்வி, திருமண தேவைகள். இத்துடன் வீட்டு வசதி மற்றும் சிறப்பு சூழ்நிலைகளும் உள்ளன. கல்வி தேவைக்காக 10 முறை வரையிலும் திருமணத்திற்காக 5 முறை வரையிலும் பணத்தை எடுக்க முடியும். முன்னதாக, கல்வி மற்றும் திருமணத்திற்காக மூன்று முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இப்போது தங்களின் தேவைக்கு ஏற்ப பல சந்தர்ப்பங்களில் பணத்தை எடுக்க முடியும்.
மேலும், பணத்தை எடுக்கும் நடைமுறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பகுதியளவு பணம் எடுப்பதற்கு எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
விமர்சனம் ஏன்? – ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம், பொருளாதாரம் தவறாக கையாளப்பட்டுள்ளதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் விருதுநகர் தொகுதி எம்பியுமான மாணிக்கம் தாக்கூர், “மோடி அரசின் இபிஎஃப்ஓ விதிகள் கொடூரமானவை. ஓய்வூதியர்களும், வேலை இழந்தவர்களும் தங்கள் சொந்த சேமிப்பைப் பெறுவதில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இது மக்களின் வாழ்வை அழிக்கும் செயல். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும்.
புதிய விதிகளின் கீழ், வேலை இழந்து 12 மாதங்களுக்குப் பிறகே ஒருவர் தனது பிஎஃப் பணத்தை முழுமையாகத் திரும்பப் பெற முடியும். 36 மாதங்களுக்குப் பிறகே, ஓய்வூதியத்தை திரும்பப் பெற முடியும். இத்தகைய விதிகளால் யாருக்கு லாபம்? நிச்சயமாக தொழிலாளர்களுக்கு அல்ல.
ஒரு தொழிலாளி தனது வேலையை இழந்தாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ அவர் தனது உழைப்பால் சேமித்த சேமிப்பை அணுக காத்திருக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அதேநேரத்தில், இந்த அரசாங்கம் தனது நெருங்கிய நண்பர்களுக்காக லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்கிறது. இது சீர்திருத்தம் அல்ல; கொள்ளை.
இபிஎஃப் தொகையை நம்பி வாழும் ஓய்வூதியர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். அதிகாரத்துவக் கொடுமை நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை அழிக்க விடக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்பி சாகெட் கோகலே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய இபிஎஃப்ஓ விதிகள் அதிர்ச்சியூட்டுபவையாகவும் ஆபத்தானவையாகவும் உள்ளன. இது சம்பளம் வாங்குபவர்களின் பணத்தை வெளிப்படையாகத் திருடுவதாகும்
இதற்கு முன், ஒருவர் தனது வேலையை இழந்தால் 2 மாதத்துக்குப் பிறகு தனது இபிஎஃப் தொகையை முழுமையாகத் திரும்பப் பெறலாம். அது தற்போது ஒரு வருட காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓய்வூதியத்தைப் பெற இதற்கு முன் 2 மாதங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அது தற்போது 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
விதிகள் இப்படி இருந்தால், ஒரு சாதாரண நடுத்தர வர்க்க நபர் எப்படி உயிர்வாழ்வார்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி பணம் எடுப்பதால்… – இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களையும் முன்வைத்து அடிக்கடி பணம் எடுக்கிறது. இது அவர்களின் எதிர்கால பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
2024-25 காலக்கட்டத்தில் மட்டும் 52.95 லட்சம் உறுப்பினர்கள் பணம் எடுத்துள்ளனர். இவர்களில் 75 சதவீதம் பேர் ரூ.50 ஆயிரத்துக்கும் கீழும், 48.73 சதவீதம் பேர் ரூ.20 ஆயிரத்துக்கும் கீழும் பெற்றுள்ளனர். 1.29 சதவீதம் பேர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பெற்றுள்ளனர். 1.01 சதவீதம் பேர் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பெற்றுள்லனர். வெறும் 0.62 சதவீதம் பேர் மட்டுமே ரூ.25 லட்சம் பெற்றுள்ளனர்.
சராசரியாக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெறும் ஒரு தொழிலாளி அவர் பணிக்காலம் முற்று பெற்ற பின்னர் மொத்தம் ரூ.14 லட்சம் பெற வேண்டும். இப்போது புதிய விதியின் படி 25% மினிமம் பேலன்ஸ் இருப்பு வைத்திருப்பது அவசியம் என்பதால் பணத்தை இடையில் எடுத்தாலும் ஓய்வுக்குப் பின்னர் ரூ.3.5 லட்சத்தை அவர் பெறலாம். இதன் மூலம் சமூகப் பாதுகாப்பு என்ற இபிஎஃப்ஓவின் கோட்பாடு பாதுகாக்கப்படும் என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.
பென்ஷன் விதிகள்: இபிஎஃப் பென்ஷனை பணியிழந்த 36 மாதங்கள், அதாவது 3 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எடுக்க முடியும். முன்னதாக 2 மாதங்களிலேயே அதைப் பெற முடிந்தது. EPFO-வின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். இது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு நிறுவனப் பங்களிப்பால் சேர்கிறது.
10 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றியவர்கள், பங்களிப்புகள் நிறுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இதுவரை ஓய்வூதியத் தொகையை மொத்தமாகத் திரும்பப் பெறலாம். ஆனால், இதுவும் 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் ஓய்வுக்கு முன்னரே உயிரிழக்க நேர்ந்தால் அவரது குடும்பத்துக்கு ஒரு சமூகப் பாதுகாப்பாக இந்த முறை அமையும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
