அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதாக சசிகலா அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, கட்சியின் பெயரை அறிவித்தார்.
அதன்படி, தனது கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (All India Puratchi Thalaivar Makkal Munetra Kazhagam) என்று தெரிவித்ததுடன், தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவித்தார்.
தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் போது அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்தார்.
மக்களுக்கு சேவை செய்வதற்கும், திமுகவை எதிர்த்து நிற்பதற்கும் எம்.ஜி.ஆர். கட்சியை நிறுவினார் என்றும், ஏழைகளின் நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிறுவப்பட்ட கட்சி அது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராகவும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
