அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தளம் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்
புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்
பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் உரிய இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் எந்தவொரு சூழ்நிலையிலும் அந்தக் கொள்கையை மீறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக முழுமையாகத் தலையிடுமாறும் ஜனாதிபதி, பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
நிர்மாணங்களை மேற்கொள்ளும்போது, பிரதேசமாக மாத்திரமன்றி ஒரு நாடு என்ற வகையில் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்
