பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க ​வேண்டாம் – மனோ கணேசன்

பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை நீக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (8) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தாம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் அதற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அந்த கடிதத்தில் இந்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையக மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2018 ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

அதனை தற்போதைய அரசாங்கத்தின் சில அதிகாரிகளினால் இல்லாது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை கவலையளிப்பதாக தெரிவித்தார்.

எனவே இது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தி அந்த தீர்மானத்தை கைவிடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த அதிகார சபையை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுக்குமாறும் கோரினார்.

இந்த விடயம் தொடர்பில் பதில் வழங்கிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்கத்தினால் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இதனை மேலும் வலுப்படுத்த பிரதமர் தலைமையிலான குழுவும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply