மன்னார் சாந்திபுரம் பகுதியில் திருடப்பட்ட பெருந்தொகை நகைகள்,பணத்துடன் நான்கு பெண்கள் கைது.

 

மன்னார்  காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறித்து குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (5) மன்னார்  காவல்   நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் போது குறித்த வீட்டில் தாலிக்கொடி,சங்கிலி ,காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும்,4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக  குறிப்பிட்டிருந்தனா்.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார்  காவல்துறையினர் நிலைய பொறுப்பதிகாரி யூ.என்.கெட்டியாராச்சி இன் பணிப்புரைக்கமைய  முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த நான்கு பெண்களும் தற்போது மன்னார்  காவல்  நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்டுத்தப்பட்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர்   முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர்  மீட்கப்பட்ட நகைகள்,பணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply