சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.11) காலையில் ரூ.680 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.600 உயர்ந்து பவுன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, புதிய வரலாற்று உச்சமாக கருதப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. அதாவது காலை, மாலை என இரு வேளைகளும் மாற்றமடைந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.91,400-க்கு விற்பனை ஆனது. இதேபோல 24 காரட் தங்கம் ரூ.99,712-க்கும், 18 காரட் தங்கம் ரூ.75,600-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில், 22 காரட் தங்கத்தின் விலை மாலையில் ரூ.600 உயர்ந்து பவுன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.190 ஆகவும், கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து, ரூ.1.90 லட்சமாகவும் புதிய உச்சம் கண்டிருந்தது. புவிசார் அரசியல் காரணிகள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.72 ஆக வீழ்ச்சி கண்டிருப்பதும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.