(நா.தனுஜா)
2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், அப்பகுதியில் பதிவான உள்ளகக் குழப்பத்துக்கான உள்ளுர்வாசிகளின் உடனடித் துலங்கல் என்பதற்கு அப்பால், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் என கடந்த வாரம் வெளியிடப்பட்ட அச்சம்பவம் தொடர்பான இலங்கை மனித உரிகைள் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘திகன கலவரம்’ என அறியப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் வன்முறைகள் 2018 பெப்ரவரி 26 ஆம் திகதி அம்பாறை நகரில் ஆரம்பமாகி, அவை மார்ச் 2 ஆம் திகதியளவில் கண்டி மாவட்டத்துக்குப் பரவலடைந்தன. இதன்போது முஸ்லிம்களையும், அவர்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளையும், பள்ளிவாசல்களையும் இலக்குவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60 பக்க விசாரணை அறிக்கை பல்வேறு தரப்பினரதும் அழுத்தங்களைத் தொடர்ந்து, நீண்டகாலத்தின் பின்னர் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்டது.
திகன வன்முறைகளின் பின்னணி, அச்சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து திரட்டப்பட்ட வாக்குமூலங்கள், அவ்வன்முறைகளால் ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள், அச்சம்பவம் தொடர்பான அவதானிப்புக்கள் மற்றும் இத்தகைய இனரீதியான வன்முறைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் என்பன அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.
அவ்வறிக்கையில் எச்.ஜி.குமாரசிங்க எனும் பெயருடைய நபரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் சட்டத்தின் பிரகாரம் தெல்தெனிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாகவும், இருப்பினும் அந்நபர் கைதுசெய்யப்படவில்லை என குறித்தவொரு ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினரால் பரப்பப்பட்ட போலித்தகவல்களே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைவதற்கு வழிகோலியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளில் சிலர் இவ்வன்முறைத்தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், ஒட்டுமொத்த அதிகாரிகளும் அதனை ஊக்குவிக்கும் வகையில் செயற்படவில்லை என ஆணைக்குழுவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன் புலனாய்வுப்பிரிவின் பங்கேற்பு, வளங்கள், பாதுகாப்புத்தரப்பு உறுப்பினர்களின் போதாமை காரணமாகவே வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதாகவும், ஆகையினாலேயே சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் தலையீட்டைக் கோரவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
‘இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினரை இலக்குவைத்து தாக்குதல்கள் நடாத்தப்படும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தினுள் திகன சம்பவம் பொருந்துகின்றது. இவ்வாறான சம்பவங்கள் கிந்தோட்டை மற்றும் அம்பாறையிலும் 1915 ஆம் ஆண்டளவில் வேறு சந்தர்ப்பங்களிலும் பதிவாகியிருக்கின்றன. மதரீதியான செயற்பாடுகள் தொடர்பில் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றுப்பரவலினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டாயத்தகனம் செய்யப்பட்டமை மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சிலர் நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைக் கொள்கைகள் என்பன கடும்போக்குவாதக்குழுக்களால் பயன்படுத்திக்கொள்ளப்படக்கூடிய ஒரு விரோத சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளன’ என மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் எதிர்வருங்காலங்களில் இவ்வாறு குறித்தவொரு இனக்குழுமத்தை இலக்குவைத்து வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 11 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை ஆணைக்குழு அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.
அதன்படி புலனாய்வுத்தகவல் திரட்டலை வலுப்படுத்தல், இனக்கலவரங்களை உடனடியாகத் தடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கல், பொலிஸாரின் பங்கேற்புடன் மாதாந்தம் சிவில் குழுக்கூட்டங்களை நடாத்துதல் என்பவற்றுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரிவினைவாத மற்றும் கடும்போக்குவாத நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளைத் தடுக்கும் வகையில் அமைப்புக்களைப் பதிவுசெய்வதற்கு சமூகசேவைகள் மற்றும் நலன்கள் அமைச்சும், தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை பாடசாலைக் கல்விப் பாடவிதானத்தில் கட்டாய பாடமாக உள்வாங்குதல், இன மற்றும் மத ரீதியில் தனித்தனியாகப் பாடசாலைகள் நடாத்தப்படுவதை முடிவுறுத்தல், மனித உரிமைகள் மற்றும் சிவில் கோட்பாடுகளை வலுப்படுத்தக்கூடிய பாடத்திட்டத்தை உட்சேர்த்தல் என்பவற்றுக்கு கல்வியமைச்சும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி சட்ட அமுலாக்க அதிகாரிகளின் தவறான செயற்பாடுகள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத தாக்குதல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக வலுவான சட்ட மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு அரச அதிகாரிகளால் இழைக்கப்படும் மிகமோசமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பிரத்தியேக சுயாதீன அலுவலகமொன்றை ஸ்தாபிக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. – Vidivelli