ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு!

உக்ரேனில் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை புதன்கிழமை (22) அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையேயான உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் முறிந்த ஒரு நாளுக்குப் பின்னர் புதிய தடைகள் வெளியிடப்பட்டன. 

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவை மொஸ்கோவின் போர் நடவடிக்கைக்கு நிதியளிக்கும் திறனை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி கூறியது.

இந்த நடவடிக்கை, மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், உக்ரேனில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேலும் இணக்கமான அணுகுமுறையை எடுப்பதற்கும் இடையே உள்ள வெள்ளை மாளிகைக்கு ஒரு கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தியது. 

இந்த அறிவிப்புடன் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 2 அமெரிக்க ‍டொலர்களுக்கும் மேல் உயர்ந்தது.

வியாழக்கிழமை (23) ஆரம்ப ஆசிய வர்த்தக நேரங்களில், அமெரிக்காவின் மசகு எண்ணெய் அளவுகோலான மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) சுமார் $60.23 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 64.36 அமெரிக்க டொலர்களுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

மேற்கண்ட இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. 

இங்கிலாந்து அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, உலகளாவிய உற்பத்தியில் 6% ஆக இருக்கும் மொத்த ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கு Rosneft பொறுப்பாகும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதிகள், மேலும் மொஸ்கோவின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும். 

கிரெம்ளின் மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறும் ட்ரம்ப் இந்த நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கையை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் பாராட்டினார், அவர் அமெரிக்காவின் தடைகள் “வலுவாக வரவேற்கப்படுகின்றன” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply