வரலாற்று சிறப்புமிக்க மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா!

தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்களினால் வீழ்த்தி 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் பட்டத்தை இந்தியா வென்றது. 

பல ஆண்டுகளாக ஐசிசி மகளர் உலகக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணியின் பயணமானது மனவேதனையாக அமைந்திருந்தது.

2005 ஆம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த ஐசிசி மகளிர் ஒருநாள் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை கரேன் ரோல்டனின் சதம் அவர்களின் கனவுகளை நசுக்கியது.

2017 ஆம் ஆண்டு லோர்ட்ஸில் நடந்த ஐசிசி மகளிர் ஒருநாள் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடனான தோல்வியும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்களை உடைத்தது. 

ஆனால் 2025 ஆம் ஆண்டில், அந்த தோல்வியின் கதை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹர்மன்ப்ரீத் கவுரின் தீர்க்கமான பிடியெடுப்பும், ஷஃபாலி வர்மாவின் சகலதுறை செயல்திறனும் இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு வரலாற்று தருணத்தை உருவாக்கியது.

தங்கள் முதல் ஐசிசி பட்டத்தை வென்றதுடன் இந்திய மகளிர் அணி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் ஒருநாள் உலக சாம்பியன் வரிசையில் இணைந்தது.

சேஸிங்கில் தென்னாப்பிரிக்காவின் இறுதி விக்கெட் விழுந்ததும், மைதானம் உணர்ச்சியில் பொங்கியது.

ஹர்மன்ப்ரீத் கவுர் வெற்றியில் கர்ஜித்தார், அவரது கண்களில் கண்ணீர் மின்னியது – இரண்டு தசாப்தங்களாக நிறைவேறாத கனவுகளை எதிரொலிக்கும் ஒரு அழுகை அது. 

2023 இறுதிப் போட்டியில் மனவேதனையின் வேதனையை உணர்ந்த ரோஹித் சர்மா, அரங்கில் எழுந்து நின்று கைதட்டினார் – இது நாட்டின் பெருமை, நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை ஒரே நேரத்தில் வெளிப்படுத்திய ஒரு சைகை.

45,000 க்கும் மேற்பட்டோர் நிறைந்த நவி மும்பையில் அமைந்துள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற இந்தப் போட்டியானது தொடக்கத்திற்கு முன்னதாக மழையால் இரண்டு மணிநேரம் தாமதமானது. 

எனினும், பின்னர் போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது ஓரு ஓவர் கூட குறைக்கப்படவில்லை.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 என்ற வலுவான இலக்கினை எட்டினர்.

போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா 17.4 ஓவர்களில் 104 ஓட்டங்களை எடுத்து இன்னிங்ஸுக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தனர் – இது மெகா போட்டியின் தற்போதைய சீசனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அதிகபட்ச தொடக்க இணைப்பாட்டமாகும்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் அழுத்தத்தில் இருந்த ஷஃபாலி, ஒருநாள் உலகக் கிண்ண வரலாற்றில் அரைசதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்று தனது பாணியில் பதிலளித்தார்.

அவர் 49 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார் மற்றும் உலகக் கிண்ணத்தில் தனது அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். 

அதன்படி அவர், 78 பந்துகளில் 87 ஓட்டங்களை எடுத்து அதிரடி காட்டினார்.

மறுபுறம் மந்தனா, 58 பந்துகளில் 45 ஓட்டங்களை எடுத்து தனது பங்களிப்பினை வழங்கினார்.

இதையடுத்து, தீப்தி சர்மாவின் 58 ஓட்டங்களும், விக்கெட் காப்பாளர் ரிச்சா கோஷின் 34 ஓட்டங்களும் இந்திய அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையை (298/7) பெற்றுத் தந்தது.

பின்னர் தென்னாப்பிரிக்கா தனது சேஸிங்கனை எச்சரிக்கையுடன் தொடங்கியது.

எனினும் தஸ்மின் பிரிட்ஸ் (23 ஓட்டம்), அன்னெகே பாஷ் (0), சுனே லுஸ் (25 ஓட்டம்), மரிஜானே காப் (4 ஓட்டம்), விக்கெட் கீப்பர் சினலோ ஜாப்தா (16 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 

ஆனால் தொடக்க ஆட்டக்காரரும், தலைவருமான லாரா வோல்வார்ட் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்தார். 

இந்தியாவின் சுழல் ஜாலத்தை திறம்பட சமாளித்த அவர் சதத்தை நோக்கி துரிதமாக பயணித்தார். 

இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கேள்விக் குறியாக இருந்தது.

 6-வது விக்கெட்டுக்கு அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அன்னெரி டெர்க்சென்னை 35 ஓட்டங்களுடனுன் தீப்தி ஷர்மா வீழ்த்தினார். 

ஆனால் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த லாரா வோல்வார்ட் தனது 11 ஆவது சதத்தை எட்டினார். 

சதம் அடித்த கையோடு வோல்வார்ட் 101 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவர் தூக்கியடித்த பந்தை அமன்ஜோத் கவுர் தட்டுத்தடுமாறி பிடித்தார்.

 அவர் வீழ்ந்ததும் ஒட்டுமொத்த மைதானமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது. 

அப்போதே உலகக் கிண்ணம் கைக்கு வந்தது போல் கொண்டாடினர்.

இறுதியில் தென்ஆப்பிரிக்காவை 45.3 ஓவர்களில் 246 ஓட்டங்களில் இந்தியா சுருட்டி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கிண்ணத்தை தட்டித்தூக்கியது. 

52 ஆண்டு உலகக் கிண்ண வரலாற்றில் இந்திய மகளிர் அணி உலகக் கிண்ணத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.

போட்டியின் ஆட்டநாயகி ஷஃபாலி வர்மா தெரிவானதுடன், தொடரின் ஆட்டநாயகியாக தீப்தி சர்மா தெரிவானார். 

Image

Image

மோடி வாழ்த்து

தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வென்றதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்ட அவர்,

“2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமை மற்றும் நம்பிக்கையால் குறிக்கப்பட்டது என்றார்.

போட்டி முழுவதும் அணி விதிவிலக்கான குழுப்பணியையும் விடாமுயற்சியையும் காட்டியது. எங்கள் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். 

இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் என்றார்.

blank

₹51 கோடி ரொக்கப் பரிசு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா, ஐசிசி மகளிர் உலக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 51 ரூபா கோடி ரொக்கப் பரிசை அறிவித்தார்.

வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அடங்கிய இந்தப் பரிசு, இந்திய விளையாட்டு வரலாற்றில் மிக முக்கியமான வெகுமதிகளில் ஒன்றாகும்.

நன்றி

Leave a Reply