வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப் | I will give 2000 dollar to every American Those who oppose tax are fools Trump announced

வாஷிங்டன்: கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “கூடுதல் வரி விதிப்பை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். எனது தலைமையின் கீழ், அமெரிக்கா உலகின் மிகவும் பணக்கார நாடாக, மிகவும் மதிக்கப்படும் நாடாக, பணவீக்கம் இல்லாத நாடாக மாறியுள்ளது. பங்குச் சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை அமெரிக்க தொட்டுள்ளது.

கூடுதல் வரிகள் மூலம் டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா வருவாயாகப் பெறுகிறது. விரைவில் எங்கள் மிகப்பெரிய கடனான 37 டிரில்லியன் டாலரை செலுத்தத் தொடங்குவோம். அமெரிக்காவில் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன.

கூடுதல் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய், அதிக வருமானம் ஈட்டுபவர்களைத் தவிர ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் தலா 2,000 டாலர் (டிவிடெண்ட் – ஈவுத்தொகை) வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தப் பணம் எவ்வாறு அல்லது எப்போது விநியோகிக்கப்படும் என்பதைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், வரிகளிலிருந்து கிடைக்கும் பணம் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் அதே வேளையில் தேசியக் கடனைக் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply