சென்னை: சென்னையில், வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து, ரூ.1,738-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, இந்த மாதம் வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் சிலிண்டருக்கு ரூ.51.50 குறைந்து ரூ.1,737.50-க்கு விற்கப்படுகிறது.
வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறைக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் அதிகரித்தது. பின்னர், மீண்டும் ஏப்ரல் மாததில் இருந்து தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 6 மாதங்களில் ரூ.227 குறைந்துள்ளது. அதே நேரத்தில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது.