விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது! – Athavan News

தமிழக அரசியலில் நிலவி வந்த ஒருவார கால பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு உறுதியானதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 118 என்ற பெரும்பான்மை பலத்தைப் பெறத் தீவிரமாக முயன்று வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இன்று தனது நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.

இதன் மூலம் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான வழிமுறை அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த விசிக தலைவர் தொல். திருமாவளவனை, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தத் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் அதிகாரப்பூர்வக் கடிதத்தை திருமாவளவன் வழங்கினார்.

விசிக-வின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “விசிக-வின் 2 உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்து தவெக-வின் பலம் தற்போது 118-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார்” எனத் தெரிவித்தார்.

(தவெக கூட்டணி பலம்: 107 (தவெக) + 5 (காங்கிரஸ்) + 4 (இடதுசாரிகள்) + 2 (விசிக) = 118 இடங்கள்.)

விசிக வழங்கிய ஆதரவுக் கடிதத்தை ஆதவ் அர்ஜுனா தவெக தலைவர் விஜயிடம் ஒப்படைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, 118 உறுப்பினர்களின் பட்டியலை விஜய் இன்று மாலை ஆளுநரிடம் சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

ஆளுநரைச் சந்தித்த பின்னர், ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அசோக் நகரிலுள்ள விசிக தலைமை அலுவலகத்திற்கு விஜய் நேரில் செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பல தசாப்தங்களுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு மாற்றுத் தலைமை, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ளது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது.

 

நன்றி

Leave a Reply