
தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே, விஜய் மக்கள் இயக்கம் வழியாக கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் தன்னுடன் இணைந்து செயல்பட்டு வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல்கள் இன்று மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. பல தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விருப்பமனு அளித்திருந்தாலும், நடிகரும் கட்சித் தலைவருமான விஜய் தனது பழைய நம்பிக்கைக்குரிய தொண்டர்களுக்கே முன்னுரிமை அளித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே, விஜய் மக்கள் இயக்கம் வழியாக கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் தன்னுடன் இணைந்து செயல்பட்டு வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகராக இருந்த காலத்திலேயே தன்னை ஆதரித்தவர்கள், அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளும் இந்த நேரத்திலும் தன்னுடன் உறுதியாக நிற்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் நேரடி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் சேலத்தைச் சேர்ந்த பார்த்தீபன், கோவையைச் சேர்ந்த சம்பத், அம்பத்தூரைச் சேர்ந்த பாலமுருகன், தர்மபுரியைச் சேர்ந்த சிவா, ஈசிஆர் பகுதியைச் சேர்ந்த சரவணன், அரியலூரைச் சேர்ந்த சிவக்குமார், வேலூரைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
ஆனால், வெறும் விசுவாசத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்காமல், வேட்பாளர்களின் தகுதியையும் விஜய் கவனமாக மதிப்பீடு செய்து வருகிறார். நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் அவர் அந்தந்த தொகுதியின் வரலாறு, முக்கிய பிரச்சினைகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்ட சமூகப் பணிகள், மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்களை குறித்து கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் நடத்தி வரும் இலவச மருந்தகம், உணவகம் போன்ற சமூக சேவை முயற்சிகள் மக்களிடம் எவ்வளவு அளவு சென்றடைந்துள்ளன என்பதையும் அவர் ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.
மற்ற கட்சிகளைப் போல தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சியில் இணையும் நபர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு பதிலாக, நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக உள்ளார். இந்த அணுகுமுறை, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
